டப்பிங் யூனியன் சங்கம் தான் வாங்கும் சம்பளத்தில் 10 சதவீத பணத்தை பெற்றுக் கொள்கிறது என்று சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார் பாடகியும், பின்னணி குரல் கொடுக்கும் கலைஞருமான சின்மயி. இதையடுத்து டப்பிங் யூனியன் சங்கம் சின்மயியை அதிரடியாக நீக்கியது. இதைத்தொடர்ந்து சின்மயி ஒன்றரை லட்சம் முன்பணம் கொடுத்து, மன்னிப்பு கடிதம் கொடுத்து புது உறுப்பினர் படிவம் கொடுத்தால் மீண்டும் டப்பிங் யூனியனில் சேர்த்து கொள்வோம்’ என்று டப்பிங் யூனியன் அறிவித்தது. இந்நிலையில் இந்த செய்தியை மேற்கோள்காட்டி சின்மயி ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில்... "தமிழ்நாட்டில் தமிழ் படங்களுக்கு பணிபுரிய வேண்டும் என்றால் மன்னிப்பு கடிதமும், ரூ.1.5 லட்சம் கொடுக்க வேண்டுமாம். 2006 ஆம் ஆண்டு முதல் என்னை வைத்து டப்பிங் யூனியன் நிறைய வருவாய் பார்த்தது. ஆனால் நான் இப்போது என் வேலை உரிமைக்காக ரூ.1.5 லட்சம் கட்ட வேண்டுமா? ஒன்று இரண்டு படங்களில் டப்பிங் பேசியவர்கள் கூட யூனியனில் ஆயுள் கால உறுப்பினர்களாக இருக்கிறார்கள். 12 ஆண்டுகளாக யூனியனில் இருக்கும் நான் புதிய உறுப்பினராக சேர வேண்டுமா? டப்பிங் யூனியனிடமும், ராதாரவியிடமும் வலுக்கட்டாயமாக மன்னிப்பு கேட்க வைக்கப்படுகிறேன். யூனியனில் உறுப்பினராக சங்க விதிப்படி 2,500 ரூபாய் கட்டினாலே போதும். அப்படி இருக்கையில் எனக்கு மட்டும் ஏன் ரூ.1.5 லட்சமும் மன்னிப்பு கடிதமும் என்று தெரியவில்லை" என பதிவிட்டுள்ளார்.