‘ஒத்த செருப்பு அளவு 7’ படத்திற்குப் பிறகு பார்த்திபன் இயக்கி நடித்துள்ள திரைப்படம் 'இரவின் நிழல்'. இப்படம் 96 நிமிடங்கள் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. நான் லீனியர் திரைக்கதை முறையில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது. இப்படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதனிடையே 'இரவின் நிழல்' படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி 'நவீன் எண்டர்பிரைசஸ்' பாஸ்கர ராவ் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், " விருது பெறும் நோக்கத்துடன் 'இரவின் நிழல்' படத்தை தனது 'அகிரா ப்ரொடக்ஷன்ஸ்' சார்பில் தயாரிப்பதாக கூறி, என்னிடம் படப்பிடிப்பிற்கு தேவையான ஒளிப்பதிவு சாதனங்களை குறைந்த வாடகையில் நடிகர் பார்த்திபன் வாங்கியுள்ளார். அதற்கான வாடகை ரூ.25,13,238 பாக்கியை கொடுக்காமல் ஜூலை 15ஆம் தேதி படத்தை வெளியிட கூடாது" என குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில் சென்னை வணிக நீதிமன்றத்தில் 'இரவின் நிழல்' படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரிய வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எல்.எஸ். சத்தியமூர்த்தி, வழக்கு தொடர்பாக "நடிகர் பார்த்திபன், அவரது நிறுவனம், அந்த நிறுவனத்தின் இயக்குநரான பார்த்திபனின் மகள் கீர்த்தனா ஆகியோர் பதிலளிக்க வேண்டும்" என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 12-ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.