இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் 90களில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட ‘ஜெய் பீம்’ படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த ராஜாக்கண்ணு என்பவரின் குடும்பத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பான உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்த திரைப்படம் உருவாகி இருந்தது.
இதையடுத்து சூர்யாவின் 2டி நிறுவனம் ராஜாக்கண்ணுவின் மனைவிக்கு நிவாரண தொகை வழங்கியது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் உண்மை கதாபாத்திரமும், ராஜாக்கண்ணுவின் தங்கச்சி மகனுமான கொளஞ்சியப்பன் தனக்கும், தனது குடும்பத்திற்கும் நடந்த உண்மை சம்பவங்களை ஜெய் பீம் பெயரில் படமாக எடுத்துள்ள 2டி நிறுவனம் தனக்கும் உரிமை தொகை வழங்க வேண்டும் என சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் வரும் 26 ஆம் தேதிக்குள் சாஸ்திரி நகர் போலீசார் மனுதாரர் கொளஞ்சியப்பன் சுட்டிக்காட்டியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.
இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் சாஸ்திரி நகர் போலீசார் சூர்யா உள்ளிட்ட ஜெய்பீம் படக்குழுவினர் மீது காப்புரிமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இது தொடர்பான அறிக்கையை நாளை போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளனர்.