கேரளாவில் பிரபல நடிகை ஒருவருக்கு முன்னணி நடிகர் ஒருவர் கடந்த 2017ஆம் ஆண்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக அம்மாநில முதல்வருக்கு பெண்கள் அமைப்பினர் புகார் அளித்தனர். அந்த புகாரை விசாரிக்க கோரி கடந்த 2018ஆம் ஆண்டு நீதிபதி ஹேமா தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது. இந்த விசாரணை 2019ஆம் ஆண்டு தொடங்கி வெளியிடாமல் இருந்த நிலையில், தகவல் உரிமை ஆணையம் தலையிட்டு தற்போது வெளியாகி பெரும் பேரதிர்ச்சியை திரைத்துறையில் ஏற்படுத்தியிருக்கிறது. அந்த விசாரணை குறித்த அறிக்கையில், “முன்னணி இயக்குநர்கள், நடிகர்கள் தொடர்ந்து பட வாய்ப்பு கொடுப்பதாக கூறி நடிகைகளை பாலியல் தொல்லை கொடுத்து வருவதாகவும் அதனால் படப்பிடிப்பில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தது.
இந்த அறிக்கை வெளியான பிறகு யாரெல்லாம் பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்தார்கள் என தொடர்ந்து பொதுவெளியில் சில நடிகைகள் குற்றச்சாட்டை கூறி வருகின்றனர் அந்த வகையில் நடிகை ரேவதி சம்பத், மலையாள நடிகர் சங்க பொதுச் செயலாளர் நடிகர் சித்திக் மற்றும் ரியாஸ் கான் ஆகியோர் பாலியல் தொல்லை கொடுத்தாதக தெரிவித்திருந்தார். இதையடுத்து சித்திக் தனது நடிகர் சங்க பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து பதவி விலகினார். அதை தொடர்ந்து நடிகை மினுமுனீர், நடிகர் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. முகேஷ் மற்றும் மணியன் பிள்ளை ராஜு, இடைவேளை பாபு, ஜெயசூர்யா உள்ளிட்ட 6 பேர் தன்னை பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறியிருந்தார். மேலும் பெங்காலி நடிகை ஸ்ரீலேகா மித்ரா, மலையாள இயக்குநர் ரஞ்சித் பாலகிருஷ்ணன் மீது புகாரளித்தார். பாலியல் தொல்லைகளுக்கு எதிராக செயல்படும் பெண்கள் அமைப்பை ஆதரித்ததற்காக சில மர்ம நபர்கள் தனக்கு மிரட்டல் விடுப்பதாக நடிகை பாக்கியலட்சுமி புகார் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பெங்காலி நடிகை ஸ்ரீலேகா மித்ரா அளித்த புகாரையடுத்து மலையாள சினிமா அகடாமி தலைவர் பொறுப்பிலிருந்து இயக்குநர் ரஞ்சித் பாலகிருஷ்ணன் பதவி விலகினார். அதைத்தொடர்ந்து கொச்சி காவல்துறையினர் அவர்மீது வழக்குபதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். மேலும் “இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரத்தில் இருப்பவர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் வந்தால் பதவியிலிருந்து விலக வேண்டும்” என கேரள முன்னணி நடிகர் ப்ரித்வி ராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.