![bose venkat post viral on internet](http://image.nakkheeran.in/cdn/farfuture/7qZJVy10MrA_pXpdrvStK81NGm6fz70FBHPiX97yh-U/1695624883/sites/default/files/inline-images/40_51.jpg)
நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட், 'கன்னி மாடம்' படத்தை தொடர்ந்து தற்போது 'மா.பொ.சி' என்ற தலைப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இதில் விமல் கதாநாயகனாக நடிக்க சிராஜ் தயாரிக்கிறார். படத்தின் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த பதிவில், "எங்கும் நசுக்கப்படுவது தான் ஏழ்மை, இங்கு 100 கோடிக்கு மேல் பணம் இரைத்து தவறான படங்களை ஏன் எடுக்கிறீர்கள் என்று கேட்க ஆள் இல்லை. மக்களுக்கு பிரயோஜனமான தேவையான அவசியமான திரைப்படங்களை தராமல், தன் கஜானாக்களை மட்டும் நிரப்பும் திரைப்படங்களை எடுக்கும் கார்ப்பரேட்டுகளை கேள்வி கேட்காமல், பணத்தைக் கருத்தில் கொள்ளாமல் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு வரும் தயாரிப்பாளர்களை தடுத்து நிறுத்துவது, இங்கு இருக்கக்கூடிய ஏற்றத்தாழ்வு, சாதியக் கொடுமை, மன ரீதியான பிரச்சனைகள் ஆகியவற்றை சினிமாக்களாக அறிவுரைகளாக அக்கறையுடன் சொல்லும் அருமையான சிறு திரைப்படங்களை தடுப்பது என்பது ஒரு விதமான பாசிச மனப்பான்மை.
தமிழகத்தில் தடுக்கப்பட வேண்டிய சினிமா என்பது, எடுக்க கூடாத சினிமா என்பது, யாருக்கும் உபயோகமில்லாமல், எந்தவித பயனையும் எந்த மக்களுக்கும் அளிக்காமல், வெறும் பாக்கெட்டை நிரப்பும் சினிமாக்கள், மொத்தம் 4 பேர் பணத்தை எடுத்துக் கொண்டு பிரித்துச் செல்லும் அந்த புத்திசாலிகள். அவர்களைத் தான் தடுத்து நிறுத்த வேண்டும். மாறாக சிறிய பட்ஜெட் என்று வெறுமனே வார்த்தைகளை பயன்படுத்தி நல்ல திரைப்படங்களை தடுப்பது என்பது நம் தமிழ் சினிமாவிற்கு நாமே தன் தலையில் மண்ணள்ளி கொட்டுவதற்கு சமம்... இந்த பாசிச எண்ணம் யாரிடம் இருந்தாலும் அது தவறு" என குறிப்பிட்டுள்ளார்.