வெற்றி தோல்வியை தாண்டி திரில்லர், ஆக்சன், காமெடி என்று அனைத்து வகையான படங்களும் செய்ய வேண்டும் என்பதுதான் என் ஆசை. செய்வதை நாம் சரியாகச் செய்ய வேண்டும். வெற்றியும் தோல்வியும் மக்கள் கையில் என நக்கீரன் ஸ்டூடியோவிற்கு அளித்த பேட்டியில் சொல்லியுள்ளார் பாபி சிம்ஹா. சமீபத்தில் இவர் நடித்த வசந்தமுல்லை திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இப்படத்தை இவரது மனைவி ரேஷ்மி தயாரித்திருக்கிறார்.
பாபி சிம்ஹா பேசியதாவது, “இந்தப் படத்தின் இயக்குநர் ரமணன் எதிர்காலத்தில் நிச்சயம் ஒரு பெரிய இயக்குநராக வருவார். அவரைப் போன்றவர்களால் வசந்தமுல்லை மாதிரியான கதையை யோசிக்க முடியும். அவருக்கு என்ன வேண்டும் என்பதில் மிகவும் தெளிவாக இருப்பார். அவருடைய குறும்படம் பார்த்து தான் அவரைத் தேர்வு செய்தேன். அவரை அறிமுகப்படுத்தியதில் எனக்குப் பெருமை. அவர் போலவே அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் சிறப்பாகப் பணிபுரிந்துள்ளனர்.
மேலும், கதை விவாதம் முதற்கொண்டு நாயகி காஷ்மிராவை பங்கேற்க வைத்தோம். இரண்டாம் பாதியில் வசனம் குறைவு. எக்ஸ்பிரஷன்கள் மூலம் கதையை நகர்த்த வேண்டும் எனும்போது அதை மிகச் சிறப்பாக செய்தார். பிரேமம் புகழ் இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசனுக்கு கேரளாவைத் தாண்டி தமிழ்நாட்டிலும் நிறைய ரசிகர்கள் உண்டு. அதனால் அவரை இசையமைப்பாளராக்கினோம்” என்றார்.