திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘ப்ளூ ஸ்டார்’ படத்தின் ஒளிப்பதிவாளர் தமிழ் அழகனை நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக சந்தித்தோம். சினிமாவில் தன்னுடைய பயணம் குறித்தும் ப்ளூ ஸ்டார் படம் குறித்தும் பல்வேறு கருத்துக்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.
ப்ளூ ஸ்டார் திரைப்படத்தில் குறிப்பாக ஒளிப்பதிவை பாராட்டி நிறைய பேர் போன் பண்ணி வாழ்த்தினார்கள். இதெல்லாம் ரொம்ப நுணுக்கமாக செய்த விசயங்கள் என்று படத்தில் நான் நினைத்த பல விசயங்களை கவனித்து நிறைய பேர் சொன்னது ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. கதைக்களம் அரக்கோணம் என்பதால் அங்கே என்ன இருக்கிறதோ, கிடைக்கிறதோ அதை வைத்துத்தான் படத்தை எடுத்தாக வேண்டும். அதுதான் நேட்டிவிட்டியோடு இருக்கும் என்பதால் அரக்கோணத்திற்கு அதிக வெயில், ரயில்வே ஸ்டேசன் இதுதான் ஸ்பெசல். அதையே படம் முழுவதும் பயன்படுத்தினோம்.
எங்க ஃப்ரேம் வைத்தாலும் இது அரக்கோணம் என்று தெரியவேண்டும். அதில் ரொம்ப கவனமாகவே இருந்தோம். அதற்கு வெயில் ஒரு முக்கிய பங்களிப்பாக இருந்தது. படத்தில் நடித்தவர்கள் கருப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக ஆரம்பத்தில் மேக்கப் போட்டோம். பிறகு வெயிலுக்கு அவர்களெல்லாம் மேட்ச் ஆகிட்டாங்க, பில்டப் கொடுக்க, சில எமோஷ்னல்ஸ் கன்வே பண்ண ஸ்லோமோசன் சீன்கள் தேவைப்படும், அதை எடுத்து வைத்துக்கொள்வோம், தேவைப்பட்டால் பயன்படுத்துவோம், இந்த படத்தில் அது தேவைப்படவே இல்லை.
கதையை முதலில் படித்தபோது கிரிக்கெட்டை மையப்படுத்திய கதையில் காதல் சார்ந்த போர்ஷன் ரொம்ப சூப்பரா இருந்தது. அதையே ஒரு தனிப்படமாக எடுக்கலாம் அந்த அளவிற்கு அழகான காதல் கதையும் உள்ளது. படத்திற்குள் சேராத ரஞ்சித் - ஆனந்தி ஜோடி நிஜ வாழ்க்கையில் அசோக்செல்வன் - கீர்த்தி கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க, அது ரொம்ப ஆச்சரியமாகவும் இருந்தது. இயக்குநரும் இந்த படத்தின் தயாரிப்பாளருமான ரஞ்சித் அண்ணா உதவி இயக்குநராக சென்னை:28 படத்துல வேலை பார்க்கும் போது அவரை பைக்ல பிக் அப் டிராப் பண்றது ப்ளூ ஸ்டார் இயக்குநர் ஜெய்குமார். இன்று ரஞ்சித் அண்ணா தயாரிக்க, ஜெய்குமார் படம் பண்ணது ரொம்ப சூப்பரான அழகான விசயமாக நான் பார்க்கிறேன்.