சமீபத்தில் திரையரங்கில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘ப்ளூ ஸ்டார்’ . இப்படத்தில் நடித்த இயக்குநர், நடிகர் பாண்டியராஜனின் மகனும், தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகனுமான பிரித்விராஜனை நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக சந்தித்தோம். நம்மிடையே பல்வேறு சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
ப்ளூ ஸ்டார் படத்தில் நான் பவுலராக வருவேன். ஆனால் படக்கதைக்கு அப்பாற்பட்டு நான் நிஜமாக கிரிக்கெட் விளையாடும் போது கீப்பர் மற்றும் ஓப்பனிங் பேட்ஸ் மேன் தான். கீப்பராக இருந்து கொண்டு பவுலருக்கு ஐடியா கொடுப்பனே தவிர, நான் பவுலிங் போட்டதில்லை. படத்திற்காக ஊர்களில் கிரிக்கெட் விளையாடுகிற நிறைய பேரை பார்த்து ஒரு ஸ்டைல் செட் பண்ணினோம். இயக்குநரும் பலவிதமாக என்னை பந்து வீச வைத்து அதிலிருந்து ஒரு ஸ்டைலை படத்தில் பயன்படுத்தினார். இதற்காக ப்ரீ புரொடெக்சனில் நிறைய ஒர்க் பண்ணினோம்.
இயக்குநரின் தனிப்பட்ட வாழ்க்கையின் சுபாவத்திலிருந்து நிறைய விசயங்கள் என்னுடைய கதாபாத்திரத்தில் சேர்க்கப்பட்டது. இயக்குநர் ஜெயக்குமாரும் கதாபாத்திரத்திற்கு நிறைய ஹோம் ஒர்க் பண்ணி மெருகேற்றியிருந்தார். அதுதான் இந்த அளவுக்கு பேசப்பட்டதற்கு முக்கிய காரணமாகவும் இருக்கிறது. படப்பிடிப்பு தளம் என்பது எப்பவும் ஜாலியாகவே இருக்கும். சாந்தனு சிறு வயதிலிருந்தே நண்பர், நட்சத்திர கிரிக்கெட் போட்டிகளில் அஸ்வினுடன் இணைந்து விளையாடி இருக்கேன். அதனால் அவர்களோடு இணைந்து நடிப்பது எளிமையாக இருந்தது.
சிறு வயதில் எல்லாருக்கும் ஒரு பக்குவமற்ற காதல் இருக்கும். அதை இப்போது நினைத்துப் பார்த்தாலும் நமக்கே சிரிப்பா இருக்கும். அப்படியான ஒரு காதலும் எனக்கு படத்தில் இருக்கும், அது ஜாலியாகவும் இருக்கும். அந்த கதாபாத்திரம் சொல்கிற காதல் கவிதைகள் ஃபன்னா இருக்கும். அரக்கோணம் பாடலின் டான்ஸ் செம்மையாக இருந்தது.