நடிகையும் நாடாளுமன்ற உறுப்பினருமான கங்கனா ரனாவத், தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருவார். அந்த வகையில் சமீபத்தில் விவசாயிகள் குறித்து கருத்து தெரிவித்திருந்தது தொடர்பாகச் சர்ச்சையில் சிக்கினார். ஒரு தனியார் ஊடக பேட்டியில் அவர் பேசியதாவது, “விவசாயிகள் போராட்டத்தில் பாலியல் துன்புறுத்தலும் கொலைகளும் அரங்கேறின. மத்திய அரசு வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றது. இல்லையென்றால் அவர்கள் நாட்டில் எதையும் செய்திருக்க கூடும். தேசத்தின் தலைமை வலுவாக இல்லாமல் போயிருந்தால் பஞ்சாப் மாநிலத்தை வங்கதேசமாக மாற்றி இருப்பார்கள்” என்றார்.
கங்கனா ரனாவத்தின் இந்தக் கருத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் வலுத்தன. இதனைத் தொடர்ந்து தற்போது கங்கனாவின் பேச்சை பா.ஜ.க.-வே கண்டித்துள்ளது. இது தொடர்பாகப் பஞ்சாப் பா.ஜ.க மூத்த தலைவர் ஹர்ஜித் கரேவால், “விவசாயிகள் போராட்டம் குறித்து பாஜக எம்.பி கங்கனா ரனாவத் கூறியது கட்சியின் நிலைப்பாடு அல்ல. அவர் கூறிய கருத்தை பா.ஜ.க. ஏற்கவில்லை. கங்கனா ரனாவத்துக்கு கட்சி சார்பில் கொள்கை விஷயங்களை பேச அதிகாரம் இல்லை” என அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே 2020- 2021 காலகட்டத்தில் விவசாயிகள் நடத்திய போராட்டம் குறித்து, 100 ரூபாய்க்காக போரட்டத்தில் உட்கார்ந்து இருக்காங்க என்று கங்கனா ரனாவத் கூறியிருந்தது சர்ச்சையான நிலையில், கடந்த ஜூனில் சண்டிகர் விமான நிலையத்தில் கங்கனா ரனாவத்தை சி.ஐ.எஸ்.எஃப் பெண் கான்ஸ்டபிள் ஒருவர் கன்னத்தில் அறைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.