கமல்ஹாசன் நடித்த பட்டாம்பூச்சி, தாம்பத்யம் ஒரு சங்கீதம், இவர்கள் வருங்கால தூண்கள் உள்பட 18 படங்களை தயாரித்த ஆர்.ஆர்.பிலிம்ஸ் ரகுநாதன் தயாரிப்பில் 19வது படமாக உருவாகியிருக்கும் 'மரகதக்காடு' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அப்போது விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் இமயம் பாரதிராஜா பேசும்போது.... "இந்த விழாவில் பேசலாமா வேண்டாமா என ஒரு தயக்கத்தோடுதான் வந்தேன். ஆனால் சமூக நோக்குடன் இப்படி ஒரு அருமையான படத்தை எடுத்துள்ளார்கள் என்பது தெரிந்தும் நான் பேசாமல் போனால் அது கலைக்கு நான் செய்யும் துரோகம்.
இந்தப்படத்தின் இயக்குனர் மங்களேஸ்வரன் இயற்கையை ரசிப்பவர். அதனால் இப்படத்தை ரசித்து ரசித்து எடுத்துள்ளார். இப்படத்தின் நட்சத்திரங்களை படத்தில் பார்த்தபோது ஒரு விஷயம் தோன்றியது. கமல் அழகாக இருந்ததால் தான் நான் அவரை சப்பாணி கேரக்டருக்கு தேர்வுசெய்தேன். அழகாக இருப்பதை சற்று அழுக்காக்கி காண்பிக்கும்போதுதான் மக்களுக்கு அது பிடிக்கிறது. இதே நாகேஷை போட்டிருந்தால் எழுந்து போயிருப்பார்கள். பிளாக் அன்ட் ஒயிட்டில் எடுக்கும் முடிவில் இருந்தபோது நாகேஷைத்தான் சப்பாணியாக நடிக்கவைக்க முடிவு செய்திருந்தேன். ஆனால் படத்தை கலரில் எடுத்ததால் கமலை தேர்வுசெய்தேன்" என்றார்.