Skip to main content

“திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் படங்கள் வெளியாகாது” - பாரதிராஜா திட்டவட்டம்

Published on 02/11/2020 | Edited on 02/11/2020

 

barathiraja

 

 

கோலிவுட்டில் சினிமா தயாரிப்பாளர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் வியாபார ரீதியாக நிறைய பிரச்சனைகள் இருக்கின்றன. இந்த கரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில் கடந்த மூன்று மாதங்களாக தமிழ்நாடு தயாரிப்பாளர்கள் நடப்பு சங்கமும், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கமும் தங்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்தாக வேண்டும் என்று மாற்றி மாற்றி அறிக்கையாக வெளியிட்டு வந்தனர். தற்போது திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து மீண்டும் சுற்றறிக்கை ஒன்றை பாரதிராஜா வெளியிட்டுள்ளார்.

 

அதில், “தமிழ்த்‌ திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள்‌ சங்கம்‌ ஆகஸ்ட்‌ மாதம்‌ தொடங்‌கியவுடன்‌, இனிமேலும்‌ வி.பி.எஃப் என்ற கட்டணத்தை வசூலிக்கக்கூடாது என்று தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள்‌ சங்கத்தை சேர்ந்த அனைவருக்கும்‌, அனைத்து டிஜிட்டல்‌ புரொஜக்‌ஷன் (QUBE/UFO/PRASAD) நிறுவனங்களுக்கும்‌ முறையாகக் கடிதம்‌ அனுப்பினோம்.

 

அதில்‌ 12 வருடங்களுக்கு மேலாகக் கட்டி வரும்‌ VPF என்கிற வாராவாரம்‌ கட்டணத்தை இனிமேல்‌ கொடுக்க முடியாது. டிஜிட்டல்‌ நிறுவனங்கள்‌ மாஸ்டரிங்‌, குளோனிங்‌, டெலிவரி மற்றும்‌ சேவைக்கான ஒரு முறை (ONE TIME PAYMENT) கட்டணம்‌ எதுவோ அதை மட்டுமே இனிமேல்‌ எங்களால்‌ தர முடியும்‌ என்று தெரிவித்து இருந்தோம்‌.

 

திரையரங்கில்‌ உள்ள புரொஜக்டர்‌ சம்பந்தப்பட்ட லீஸ்‌ தொகையை திரையரங்குகள்‌தான்‌ கட்ட வேண்டும்‌, தயாரிப்பாளர்கள்‌ அல்ல என்பதையும்‌ தெளிவாகக் குறிப்பிட்டிருந்தோம்‌.

 

அத்தகைய ஒரு முறை கட்டண முறைக்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால்‌, திரையரங்குகள்‌ மீண்டும்‌ திறக்கப்பட அனுமதி வந்தாலும்‌, எங்களின்‌ புதிய திரைப்படங்களை வெளியிட முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்படுவோம்‌ என்பதையும்‌ குறிப்பிட்டிருந்தோம்‌.

 

100 பேருக்கும்‌ மேல்‌ நடப்பு தயாரிப்பாளர்கள்‌ இந்த முடிவை எடுத்துத் தெரிவித்த போதிலும்‌, திரையரங்கு உரிமையாளர்களும்‌, டிஜிட்டல்‌ புரொஜக்‌ஷன்‌ நிறுவனங்களும்‌ (QUBE/UFO), எங்களின்‌ கோரிக்கைக்குச் செவி சாய்க்காமல்‌, நாங்கள்‌ தொடர்ந்து வி.பி.எஃப் கட்டணத்தை வாங்குவோம்‌ என்று தெரிவித்துள்ளனர்‌.

 

தயாரிப்பாளர்கள்‌ அனைவரும்‌ ஒருங்கிணைந்து வெளியிட்டிருந்த 5 கோரிக்கைகளில்‌ ஒன்றைக் கூட அவர்கள்‌ ஏற்றுக்‌கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளதால்‌, நடப்பு தயாரிப்பாளர்கள்‌ சங்கத்தைச் சேர்ந்த அனைத்துத் தயாரிப்பாளர்களும்‌ ஒருங்கிணைந்து, வி.பி.எஃப் கட்டணத்திற்கு ஒரு முடிவு வரும்‌ வரை தங்களின்‌ புதிய திரைப்படங்களை வெளியிடுவதில்லை என்று ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 

எனவே, இந்த வி.பி.எஃப் கட்டணப்‌ பிரச்சனைக்கு முடிவு எட்டும்‌ வரை, அனைத்துத் தயாரிப்பாளர்களும்‌, தங்களின்‌ புதிய படங்களின்‌ வெளியீட்டுத் தேதியை தங்களுடைய சங்க நிர்வாகிகளுடன் கலந்தோசித்து முடிவு எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். 

 

மற்ற சங்கங்களுக்கும் இந்த சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் மூலம், தீபாவளிக்கு புது படங்கள் வெளியாவதில் சிக்கல் இருக்கும் என தெரிகிறது. நாளைதான் இதுதொடர்பாக திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


 

சார்ந்த செய்திகள்