பிரபல திரை பிரபலம் மனோபாலா (69) உடல் நலக்குறைவால் காலமானார். கல்லீரல் தொடர்பான பிரச்சனை குறித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மறைந்துள்ளார். தமிழ் சினிமாவில் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத்திறமை கொண்ட நபராக திகழ்ந்தவர் மனோபாலா. இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக தனது திரை பயணத்தை தொடங்கிய மனோபாலா, 20க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார்.
இவரது மறைவு திரையுலகத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திரை பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் பலர் மனோபாலா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மனோபாலாவின் குருவான பாரதிராஜா, "என் மாணவன் மனோபாலா மறைவு எனக்கும் எங்கள் தமிழ் திரை உலகிற்கும் ஈடு செய்யமுடியாத பேரிழப்பாகும்" என ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நடிகர் ரஜினி, "பிரபல இயக்குநரும், நடிகருமான, அருமை நண்பர் மனோபாலாவுடைய இறப்பு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய அனுதாபங்கள். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ரஜினியின் 'ஊர்காவலன்' படத்தை மனோபாலா இயக்கினார். மேலும் ரஜினியின் 'சந்திரமுகி', 'குசேலன்', 'லிங்கா' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
மனோபாலாவின் உடல் நாளை (04.05.2023) காலை 10.30 மணிக்கு வட பழனியில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.