இது வரை சொல்லப்படாத விஷயத்தை சொல்லியிருக்கிறோம் என்று பலரும் சொல்வதுண்டு. ஆனால், சமீபத்தில் வெளிவந்திருக்கும் 'சிம்பா' ட்ரைலரை பார்க்கும்போது படத்தை உருவாக்கியவர்கள் சொல்லாவிட்டாலும் நமக்கே தெரிகிறது, தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத ஒரு விஷயத்தை கையில் எடுத்திருக்கிறார்கள் என்பது. தமிழின் முதல் 'ஸ்டோனர்' படமாம் இந்த சிம்பா. 'ஸ்டோனர்' படம் என்றால்? அதை நாங்க சொல்ல மாட்டோம். கூகுள் பண்ணி பார்த்துக்கங்க.
பரத், பிரேம்ஜி இருவரும் முக்கிய பாத்திரங்களாக நடித்துள்ள 'சிம்பா' படத்தை இயக்கியிருப்பவர் அரவிந்த் ஸ்ரீதர். இவருக்கு முதல் படம் இது. "சந்தோஷத்தோட கெமிக்கல் நேம் என்ன தெரியுமா?" என்று கேட்கும் கெளதம் வாசுதேவ் மேனன் குரலில் தொடங்கும் ட்ரைலரில் பரத் இதுவரை காணாத அளவு ஸ்மார்ட்டாக இருக்கிறார். பிரேம்ஜி ஒரு நாய் போல ஃபேன்சி ட்ரெஸ் அணிந்திருக்கிறார். அதே நேரம், பரத்தின் வீட்டில் வயதான தோற்றத்தில் பிரேம்ஜியின் புகைப்படம் இருக்கிறது. அந்த வீட்டில் தனியாக வாழும் பரத் எந்த நேரமும் புகைமயமாக இருக்கிறார். அவருக்குத் தோன்றும் மாயைகளே படத்தின் அடிப்படையாக இருக்கும் போல. பரத் வாழும் வீடு செம்ம இண்ட்ரஸ்டிங்காக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
மொத்தத்தில் படம் எது மாதிரியுமில்லாத புதுமாதிரியாக இருக்கிறது. பரத்திற்கு ஒரு பெரிய ப்ரேக் தேவைப்படும் நேரத்தில் வருகிறது 'சிம்பா'. இந்தப் படத்தின் மீது மிகுந்த நம்பிக்கையோடு காத்திருக்கிறார் பரத்.