தமிழ் சினிமா துறையில் தயாரிப்பாளர்களுக்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் இடையே வி.பி.எஃப். கட்டணம் குறித்தான பேச்சுவார்த்தை இன்னும் முடியவில்லை. இந்த பிரச்சனைக்கு தீர்வு கண்டபின்புதான் திரையரங்கில் புது படங்கள் வெளியாகும் என்று முன்பே பாரதிராஜா அறிவித்திருந்தார்.
அப்போதும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் சமரசம் செய்துகொள்ளவில்லை. இந்நிலையில் இன்று பாரதிராஜா இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “தற்போது வி.பி.எஃப் சம்பந்தமாக அனைத்துத் தரப்புகளின் நிலைப்பாட்டின் காரணமாக புதுப்படங்கள் வெளியிடுவதில் சிக்கல் நிலவி வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் தமிழக அரசு திரையரங்குகளைத் திறக்க அனுமதி அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
மேலும், சமீபத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூவும், திரையரங்கு உரிமையாளர்களும் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இந்த காலகட்டத்தை கருத்தில்கொண்டு ஒரு வருட காலத்திற்கு தற்காலிகத் தீர்வு ஒன்றை எங்கள் நிலைப்பாட்டில் இருந்து கீழிறங்கி முன்வைத்தோம்.
எனினும் பல கட்டங்களில் பேச்சுவார்த்தை நடத்தியும் சுமுகமான தீர்வு எட்டப்படாததால் மீண்டும் தயாரிப்பாளர்களோடு கலந்தாலோசித்ததில் நல்ல தீர்வு ஏற்படும் வரை புதுப்படங்களை வெளியிட முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.