Skip to main content

இவுங்க ரெண்டு பேரும் சேர்ந்தா... பாரதிராஜா - கமல் கூட்டணியின் மேஜிக்! 

Published on 17/07/2020 | Edited on 17/07/2020
barathiraja with kamalhassan

 

 

ஸ்டியோவிற்குள்ளேயே முடங்கியிருந்த தமிழ் சினிமாவை வெளியே அழைத்து வந்து மண் மனம் மாறாமல் நிஜ கிராமங்களில் படப்பிடிப்புகளை நடத்தி, தமிழர்களின் வாழ்வியலை புழுதி படர்ந்த காட்சிகளுடனும் வயக்காட்டுப் பேச்சுகளுடனும் படமாக்கியவர் பாரதிராஜா. அவருக்கு முன்பே சில முயற்சிகள் நடந்திருந்தாலும் தமிழ் சினிமாவின் பாணியே ஒரு மாற்றத்தை காணும் அளவுக்குத் தாக்கத்தை உண்டாக்கியவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா. இன்னொரு பக்கம் தனது ஆரம்ப காலத்திலிருந்தே நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் சோதனை முயற்சியை கையாண்டவர் கமல்ஹாசன்.   அந்த வகையில் கமல் - பாரதிராஜா கூட்டணி, தமிழ் சினிமாவில் செய்த மாயங்கள் மறக்க முடியாதவை. அவர்கள் கூட்டணியில் வெளிவந்த திரைப்படங்களை திரும்பிப்பார்ப்போம்.

 

16 வயதினிலே
 

16 vayathinile

 

ஹீரோயினுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் படத்தின் கதையில், பார்த்தால் பரிதாபம் வரக்கூடிய சப்பானி என்னும் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க ஒரு ஹீரோவை தேடுவதே பாரதிராஜாவுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்திருக்கும். இப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டவர் கமல்ஹாசன். அப்போது அவர் வளர்ந்து வரும் நடிகர்கள் லிஸ்ட்டில் முதன்மையாக இருக்கும் 23 வயது இளைஞரே. பாரதிராஜா 16 வயதினிலே படத்திற்கான திரைக்கதையை எழுதும்போதே கமல்ஹாசனைத்தான் முதலில் மனதில் நினைத்திருப்பார்.  சப்பானி என்பவன் ஒரு அப்பாவி, அவனுக்குள் இருக்கும் தைரியத்தை வெளிக்கொண்டு வருகிறாள் மயில். மயில் கதாபாத்திரத்தில் நடித்தது ஸ்ரீதேவி. கமல் சப்பானியாக நடித்திருக்க மாட்டார், சப்பானியாகவே வாழ்ந்திருப்பார். ஆம், படம் பார்க்கும் ஒவ்வொருவரும் அதை உணர்வோம். படத்தில் சப்பானி, கோபாலகிருஷ்ணனாக மாறும் அந்தத் தருணத்திலிருந்து தமிழ் சினிமாவும் ஒரு படி மேல் செல்லத் தொடங்குகிறது. தன்னுடைய முதல் படத்தில் வளர்ந்து வரும் நட்சத்திரத்திடம் கோவணம் மட்டும் அணிந்துகொண்டு நடிக்கிறீர்கள் என்பதை சொல்லி நடிக்க வைக்க இயக்குனர் பாரதிராஜாவால் மட்டுமே இயலும். அதுபோலவே, அதுபோன்ற காட்சியில் எந்த தயக்கமுமின்றி நடிக்க கமல்ஹாசனால் மட்டுமே முடியும். 

 

சிகப்பு ரோஜாக்கள்

 

பாரதிராஜாவுக்கு சவால்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அவருடைய முதல் இரண்டு படங்களும் கிராமம் சார்ந்த கதைகள் என்பதால் பாரதிராஜாவை கிராமக்கதை இயக்குனராகப் பார்த்தனர். அந்த சமயத்தில் தன்னுடைய மூன்றாவது படத்தை நகர்ப்புற த்ரில்லர் படமாக இயக்கினார். இது முற்றிலும் மாறுபட்ட கதைக்களம். எப்போது இயக்குனர் தன்னுடைய விதிமுறையை திருத்தி எழுத நினைக்கின்றாரோ, சினிமா பயணத்தில் வேறு ஒரு பாதையை தேர்ந்தெடுக்க நினைக்கிறார்களோ அப்போதெல்லாம் நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய பங்களிப்பை கொடுப்பார். பாரதிராஜாவின் முதல் படத்தில் கோவணத்துடன் நடித்த கமல்ஹாசன் இப்படத்தில் அல்ட்ரா மாடலாக கோட் சூட் என ஹாலிவுட் நடிகர்களுக்கே டஃப் கொடுத்தார். இந்தப் படத்தின் உருவாக்கமும் ஒரு புதுமையான த்ரில்லர் அனுபவமாகவும், இளையராஜாவின் பின்னணி இசை ஹாலிவுட் த்ரில்லர் படங்களின் அளவிற்கு இருந்ததால் புதுமை விரும்பிகளை மீண்டும் கவர்ந்தது இக்கூட்டணி. எந்தளவிற்கு புதுமை என்றால் ஹீரோ ஒரு சைக்கோவாகவும், சிறுவயதில் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டவராகவும், பெண்களை துன்புறுத்தி கொலை செய்பவராகவும் நடித்திருப்பார் கமல். அப்போதைய காலகட்டத்தில் இதுபோன்ற ஹீரோவை வடிவமைப்பதற்கே பாரதிராஜாவுக்கு தனி தெம்பு இருந்திருக்க வேண்டும்.

 

டிக் டிக் டிக்
 

tik tik tik

 

70களின் முடிவிலும், 80களின் தொடக்கத்திலும் பாரதிராஜா - கமல் கூட்டணியில் வெளியான இரண்டு படங்களும் நல்ல ஹிட் அடித்தன. 1981ஆம் ஆண்டு இதே கூட்டணியில் வெளியான ‘டிக் டிக் டிக்’ படம் இதற்கு முன்பு இவர்களின் உருவாக்கத்தில் வெளியான படங்களை போல அல்லாமல் புதுமையாகவே இருந்தது. க்ரைம் த்ரில்லர் ஜானரை சேர்ந்த இப்படத்தில் கமல்ஹாசன் வழக்கம்போல நடிகராக நடிக்காமல் புகைப்பட கலைஞராக வாழ்ந்திருப்பார். இந்தப் படத்தில் கமல்ஹாசனின் இளமையை, ஸ்டைலை மிகவும் அழகாகக் காட்சிப்படுத்தியிருப்பார் இயக்குனர் பாரதிராஜா. கடைசி வரை சஸ்பென்ஸை உடைக்காமல் கொண்டு செல்லும் இப்படத்தை கமல்ஹாசன் தன்னுடைய நடிப்பால் உயர்த்திப் பிடித்திருப்பார். இளையராஜா வழக்கம்போல இக்கூட்டணியில் பங்குபெறும்போதெல்லாம் தன்னால் முடிந்த புதுமையை பாடல்களின் மூலமும் பின்னணி இசையின் மூலமும் அழகாக கொடுத்திருக்கிறார். ‘நேற்று இந்த நேரம்’ என்னும் பாடலை லதா ரஜினிகாந்த் பாடியிருக்கிறார். இப்படத்தில் கூடுதல் ஈர்ப்பாக இருநதவர்கள் நாயகிகள். அதிலும் மாதவியை மறக்க முடியாதவர்கள் இன்னும் ஏராளம்.

 

ஒரு கைதியின் டைரி

 

ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு கமல் - பாரதிராஜா கூட்டணி ஆக்‌ஷன் கதையான ‘ஒரு கைதியின் டைரி’ என்னும் படத்தினை எடுத்தது. டேவிட் என்னும் அப்பாவி கிராமத்து இளைஞர், அரசியல்வாதி ஒருவரால் பாதிக்கப்பட்டிருப்பார். அதற்காக ரிவெஞ்ச் எடுப்பார். இந்தக் கதையை இயக்குனர் பாக்யராஜ் எழுத, பாரதிராஜா தன்னுடைய நேர்த்தியான திரைக்கதையின் மூலம் காட்சிப்படுத்த, அனைத்து மக்களையும் கவர்ந்த படமாக இருந்தது. சரியான கமெர்ஷியலை கொண்டு பக்கா மசாலா படமாக எடுக்கப்பட்டது. அதேபோல 16 வயதினிலே படத்தை அடுத்து, கமல்ஹாசன் நடிப்பிற்குத் தீனி போடும் படமாக இது அமைந்தது. இவ்விருவரும் இணைந்த இப்படத்தில் நேரடியாக அக்காலத்து அரசியலை விமர்சனம் செய்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்