Skip to main content

“இந்தப் பிரச்சனை மீண்டும் தொடரக்கூடாது...” -பாரதிராஜா விளக்கம்

Published on 19/11/2020 | Edited on 19/11/2020
barathiraja

 


தமிழ் திரையுலகில் இந்த வி.பி.எஃப் கட்டண பிரச்சனை கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வருகிறது. திரையரங்கு உரிமையாளர்கள் சங்கமும், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கமும் மாற்றி மாற்றி அறிக்கைப் போரில் ஈடுபட்டிருந்தனர். இதனால் தமிழ் திரைப்படங்கள் இனி வெளியாகாது என்றெல்லாம் தயாரிப்பாளர்கள் சார்பாக பாரதிராஜா எச்சரிக்கை வித்திருந்தார். தீபாவளி பண்டிகைக்கு முன்னால் திரையரங்கம் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், இந்த வி.பி.எஃப் கட்டணம் பிரச்சனை தீரவில்லை என்பதால் புதுப்படங்கள் ரிலீஸ் இல்லை என்று தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர். இதன்பின் க்யூப் மற்றும் யூஎஃப்ஓ போன்ற புரொஜக்‌ஷன் நிறுவனங்கள் இந்த ஒரு மாதத்திற்கு மட்டும் வி.பி.எஃப் கட்டணங்களை ரத்து செய்துக்கொள்வதாக தெரிவித்தனர். இதன்பின் தீபாவளிக்கு ஒருசில படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டது.

 

இந்நிலையில் மீண்டும் நடத்தப்பட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஒரு முடிவுக்கு வந்திருப்பதாக செய்திகள் வெளியாகின. பின்னர், இதுகுறித்து பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கடந்த இரண்டு மாதங்களாக தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம், க்யூப் நிறுவனம், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் ஆகியவற்றுக்கு இடையே வி.பி.எஃப் கட்டணம் குறித்துப் பேச்சுவார்த்தை நடந்து வந்தது. அந்தப் பேச்சுவார்த்தை இன்று இனிதே முடிந்து தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், க்யூப் நிறுவனத்திற்கும், தமிழ்நாடு திரையரங்கு & மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

 

அதன்படி, க்யூப் நிறுவனம், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு தற்போது இருக்கும் கட்டணத்தில் கணிசமான சதவீதத்தைக் குறைத்துக் கொள்ள ஒப்புக்கொண்டு ஒப்பந்தம் செய்துள்ளது. 31/3/2021 ஆம் தேதிக்குள், இந்த வி.பி.எஃப் பற்றிய ஒரு நிரந்தரத் தீர்வை மூன்று சாரரும் இணைந்து செய்து கொள்ளவும் இந்த ஒப்பந்தத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.

 

தமிழ்த் திரைப்பட துறை இந்தக் கரோனா கால பாதிப்பிலிருந்து மீண்டு வர வேண்டும், புதிய திரைப்படங்கள் வெளியாவதில் எந்தத் தடையும் இருக்கக் கூடாது என்ற நல்லெண்ணத்தில், மூன்று சாரரும் இந்த சுமுகமான முடிவுக்கு வந்துள்ளனர்.

 

31/3/2021 ஆம் தேதிக்குள், மூன்று சாரரும் இணைந்து வி.பி.எஃப் கட்டணம் பற்றிய ஒரு நிரந்தரத் தீர்வை எடுக்க உறுதி கொண்டுள்ளார்கள். அதன் மூலம், இந்தப் பிரச்சினை மீண்டும் தொடரக் கூடாது என்பதே அனைவரின் நோக்கம்.

 

இந்த ஒப்பந்தத்தின் மூலம், 31/3/2021 வரை தமிழ் சினிமாவில் புதிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாவதில் எந்தச் சிக்கலும் இல்லை. அதிக எதிர்பார்ப்பில் உள்ள பல பெரிய பட்ஜெட் படங்களும், நடுத்தர மற்றும் சிறு பட்ஜெட் படங்களும் தடையில்லாமல் இனிமேல் வெளியாகும். அதன் மூலம், பார்வையாளர்களுக்குப் புதிய படங்களைத் திரையரங்குகளில் பார்க்கும் வாய்ப்பும் கிடைக்கும். தமிழ்த் திரைப்படத்துறை அதன் மூலம் மொத்தமாக மீண்டு வர முடியும் என்று நாங்கள் மூன்று சாரரும் நம்புகிறோம்.

 

தமிழ் சினிமா மீண்டு வர எங்களுக்கு உறுதுணையாக இருக்கும் தமிழக முதல்வருக்கும், துணை முதல்வருக்கும், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுக்கும், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரையரங்கு & மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்த் திரைப்பட துறை சார்பிலும் மனமார்ந்த நன்றியை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்