பிரபாஸ் நடிப்பில் ஓம் ராவத் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் ‘ஆதிபுருஷ்’. ராமாயணத்தின் ஒரு பகுதியை மையமாக வைத்து உருவாகிவரும் இப்படத்தில் பிரபாஸ் ராமர் கதாபாத்திரத்திலும், கீர்த்தி சனோன் சீதை கதாபாத்திரத்திலும், சையிப் அலிகான் ராவணன் கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் அடுத்த ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே கடும் விமர்சனத்தையும் கிண்டலையும் சந்தித்து வருகிறது. மேலும் படத்திற்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், டீசரில் அனுமன் குறித்து சர்ச்சை காட்சி இருப்பதாக கூறி அதை நீக்க சொல்லி மத்தியப்பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா படக்குழுவினருக்கு கடிதம் எழுதினார். இந்நிலையில் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலின் தலைமை குருவான சத்யேந்திர தாஸ் இப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, "திரைப்படம் தயாரிப்பது குற்றமல்ல, ஆனால் அவை வேண்டுமென்றே சர்ச்சைகளை உருவாக்கி வெளிச்சத்துக்கு கொண்டு வரக்கூடாது" என்று கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து உத்தரப்பிரதேச துணை முதல்வர்கள் கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் பிரஜேஷ் பதக் ஆகியோர் இந்த டீஸருக்கு கண்டனம் தெரிவித்ததுடன், இந்து கடவுள்கள் மற்றும் தெய்வங்களை இழிவுபடுத்துவதைப் பொறுத்துக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளனர். “திரைப்படங்கள் பெரும்பாலும் இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்துகின்றன. எப்போதெல்லாம் நமது கலாச்சாரம் தாக்கப்பட்டதோ அப்போதெல்லாம் நமது கலாச்சாரத்தை காப்பாற்றியது இந்து துறவிகள்தான். எங்கள் கலாச்சாரத்தைப் பற்றி நாங்கள் பெருமைப்படுகிறோம் ” என்று பிரஜேஷ் பதக் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு இப்படத்தை திரையரங்குகளில் திரையிட எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள், "இந்து சமுதாயம் கேலி செய்யப்பட்டுள்ளன. இதை இந்து சமுதாயம் பொறுத்துக் கொள்ளாது" என்று இந்த அமைப்பின் சம்பல் பிரிவின் பிரசார் பிரமுக் அஜய் சர்மா கூறியுள்ளார். இதனிடையே பாஜக செய்தித் தொடர்பாளர் மாளவிகா அவினாஷ் கூறுகையில், ராவணன் கதாபாத்திரத்தை உருவாக்குவதற்கு முன் படத்தின் தயாரிப்பாளர்கள் எந்த ஆராய்ச்சியும் செய்யவில்லை. "நீல நிறக் கண் மேக்கப் மற்றும் ஜாக்கெட் அணிந்து கதாபாத்திரம் வருவது நம் வரலாற்றைத் தவறாக பிரதிநிதித்துவப்படுத்துவது போல் அமைந்துள்ளது. படைப்பு சுதந்திரம் என்ற பேரில் இவற்றைச் செய்யக் கூடாது" என்று கூறினார்.
இது போன்று தொடர்ந்து படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் எனக் கண்டனம் எழுந்து வரும் நிலையில் ‘ஆதிபுருஷ்’ படம் சொன்ன தேதியில் வெளியாகுமா இல்லையா என ரசிகர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.