கடந்த வருடம் அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் படம் வெளியான பின்பு அனைவரும் தானோஸை பற்றி பேசாமல் இல்லை. மீம்ஸ் தொடங்கி வீடியோக்கள் வரை தானோஸ் என்ற வில்லன் கதாபாத்திரம் பேசப்பட்டது. உலகையே காப்பாற்றிய அவெஞ்சர்ஸ் டீமையே அடித்து நொறுக்கினால் யார்தான் தானோஸை பற்றி பேசாமல் இருப்பார்கள். அப்படிப்பட்ட தானோஸிடம் இருந்து உலகை எப்படி காப்பாற்றப்போகிறார்கள் என்பதுதான் அவெஞ்சர்ஸ் எண்ட கேம் படத்தின் கதை.
உலகில் பலரும் நேற்றைய நாளை எதிர்பார்த்து காத்திருந்திந்தார்கள். நேற்றுதான் அவெஞ்சர்ஸ் டீம் தானோஸை அழிக்கிறார்களா? இல்லை மீண்டும் தோல்வியை தழுவுகிறார்களா? என்கிற கேள்விகளுக்கு விடை தெரிந்தது. பலரும் எதிர்பார்த்த எண்ட் கேம் படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. ஹாலிவுட் படமாக இருந்தாலும், அனைத்து மொழி பேசும் மக்களிடமும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியாவில் மட்டும் சுமார் 400 கோடி வசூலை வாரிக்குவிக்கும் என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில் படம் வெளியாவதற்கு முன்பே டிக்கெட் முன்பதிவில் உலகம் முழுவதும் பல நாடுகளில் சாதனை படைத்துள்ளது இப்படம். குறிப்பாக இந்தியாவில் ஒரு நாளுக்கு பத்தலட்சத்திற்கு மேலான டிக்கெட்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தது. நொடிக்கு 16 டிக்கெட்டுகள் என்ற வீதம் விற்று தீர்ந்துள்ளது. உலகம் முழுவதும் பாக்ஸ் ஆஃபிஸ் என்று பார்த்தால் 169 மில்லியன் வசூல் செய்திருக்கிறது இப்படம் என்று சொல்லப்படுகிறது. இந்திய மதிப்பில் சுமார் 1,186 கோடி. இந்திய ஹீரோக்களின் படங்கள் முதல் நாளில் வசூல் செய்யும் அளவிற்கு இந்த எண்ட் கேம் படம் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. எவ்வளவு தெரியுமா? இந்தியாவில் சுமார் 9 மில்லியன் டாலர்கள் வசூல் செய்துள்ளது. இந்திய மதிப்பில் சுமார் 60 கோடிக்கு மேல்.