Skip to main content

விஜய் சேதுபதியுடன் கூட்டணி; அடுத்த பட அப்டேட் சொன்ன அட்லீ

Published on 18/12/2024 | Edited on 18/12/2024
atlee nexr with vijay sethupathi

இயக்குநர் அட்லீ, ஏ ஃபார் ஆப்பிள் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் சார்பில் தற்போது இந்தியில் வருண் தவானின் 18வது படமான ‘பேபி ஜான்’ படத்தை தயாரித்து வருகிறார். இதன் மூலம் தயாரிப்பாளராக பாலிவுட்டில் அறிமுகமாகிறார். அட்லீ நிறுவனத்துடன் ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் சினி 1‌ ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்களும் இப்படத்தை தயாரித்துள்ளார்கள். 

இப்படத்தை காளீஸ் இயக்கும் நிலையில் கீர்த்தி சுரேஷ் மற்றும் வாமிகா கபி நடித்துள்ளனர். மேலும் ஜாக்கி ஷெராப், ராஜ்பால் யாதவ், மணிகண்டன், பி. எஸ். அவினாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். தமன் இசையமைக்கும் இப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 25ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஆக்சன் ஜானரில் உருவாகியுள்ள இப்படம் தெறி படத்தின் இந்தி ரீமேக் என தெரிகிறது. படத்தின் பாடல்கள் சமீபத்தில் ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது. 

இந்த நிலையில் ரிலீஸுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தற்போது புரமோஷன் பணிகளில் அட்லீ பிஸியாக உள்ளார். அந்த வகையில் ஒரு பேட்டியில் தயாரிப்பாளராக தனது அடுத்த படம் குறித்த அப்டேட்டை பகிர்ந்துள்ளார். அவர் பேசியதாவது, “விஜய் சேதுபதியை வைத்து ஒரு படம் தயாரிக்க இருக்கிறேன். என்னோடு முரத் கேடானியும் தயாரிக்கிறார். ரொம்ப அருமையான கதை. கடந்த இரண்டு வருடங்களாக இப்படத்தின் பணிகள் நடந்து கொண்டு வருகிறது” என்றுள்ளார். ஆனால் இயக்குநர் பற்றிய தகவலை அவர் பகிரவில்லை. இருப்பினும் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சீதக்காதி உள்ளிட்ட படங்களை இயக்கிய பாலாஜி தரணிதரன் இப்படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.     

விஜய் சேதுபதி, அட்லியின் ஜவான் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இப்போது விடுதலை பாகம் 2 படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 20ஆம் தேதி வெளியாகிறது. இதைத்தவிர்த்து ஏஸ், ட்ரெயின், காந்தி டாக்ஸ் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். 

சார்ந்த செய்திகள்