சந்தோஷ் பிரதாப் அதுல்யா ரவி இணைந்து நடித்துள்ள படம் ‘என் பெயர் ஆனந்தன்’. ஸ்ரீதர் வெங்கடேசன் இயக்கியுள்ள இப்படம் வரும் நவம்பர் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு நான்கு முறை சிறந்த படத்திற்கான விருதுகளை வென்றுள்ள இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில், நாயகி அதுல்யா ரவி பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை என்று ஒரு தகவல் வெளியான நிலையில் இதுகுறித்து தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில்...
"இந்தப்படத்தில் அதுல்யா ரவி கதாநாயகியாக ஒப்பந்தமான போது, ஒரு படத்தில் மட்டுமே நடித்திருந்தார். அதற்கடுத்து வந்த காலகட்டத்தில் சுசீந்திரன், சமுத்திரக்கனி போன்ற பெரிய இயக்குனர்களின் படங்களில் நடித்தார். அதனை தொடர்ந்து அவருக்கு தான் மிகப்பெரிய அளவில் முன்னணி நடிகையாக மாறிவிட்டோம் என்கிற உணர்வு ஏற்பட்டு விட்டது. எங்கள் படம் ஒவ்வொரு முறை சர்வதேச விருது பெற்ற போதெல்லாம் அந்த செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட கூட மறுத்துவிட்டார். மேலும் பர்ஸ்ட்லுக் போஸ்டர், டீசர் என படத்தின் எந்த ஒரு புரமோஷனிலும் அவர் தனது பங்களிப்பை தரவில்லை. இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக, படம் வெளியாகும் போது போஸ்டர் டிசைன் காக அதுல்யா ரவியின் போட்டோ ஷூட்டை நடத்த திட்டமிடிருந்தோம். ஆனால் அந்த போட்டோ ஷூட்டிற்கு கடந்த ஒரு வருடமாக 20 தடவைக்கும் மேலாக அவரை அழைத்து பார்த்தும் ஒவ்வொரு தடவையும் ஏதோதோ காரணங்களை சொல்லி தட்டி கழித்து கொண்டே இருந்தார். இப்போதும் நவ 27 ஆம் தேதி ரிலீஸ்-க்கு எந்த ஒத்துழைப்பும் தரவில்லை. இத்தனைக்கும் அவர் ஒன்றும் பெரிய நடிகை ஆகிவிடவில்லை. அவர் நடித்த படங்களும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. இப்படி இருக்கையில், தமிழ் திரையுலகில், இன்னும் நன்றாக வளர்ந்து, தனக்கென ஒரு இடத்தை பிடிக்க வேண்டிய அதுல்யா இப்படி மோசமான முன்னுதாரணமாக மாறிவிட்டது வேதனை அளிக்கிறது. தனது சோஷியல் மீடியா பக்கத்தில், “நான் கோவை தமிழ் பொண்ணு” என பெருமை பீற்றிக்கொள்ளும் இதே அதுல்யா ரவிதான், ஒரு தமிழ் சினிமா தயாரிப்பாளாரின் வயிற்றிலும் அடிக்கிறார்.
தமிழ் நடிகைகளுக்கு ஏன் வாய்ப்பு தர மறுக்கிறீர்கள் என பரவலாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. ஆனால் தமிழ்ப்பெண் என்பதாலேயே எங்கள் படத்தில் அதுல்யா ரவியை நடிக்கவைத்து விட்டு, தற்போது புரமோஷன் நிகழ்ச்சிக்க்கு கூட அவரை கெஞ்ச வேண்டிய நிலைக்குத்தான் எங்களை தள்ளியுள்ளார். இன்னும் சொல்லப்போனால் தான் நடித்த பெரிய இயக்குனர்களின் படங்கள் பெயரை மட்டுமே பெருமையுடன் சொல்லிக்கொள்ள விரும்பும் அதுல்யா, வாய்ப்பு இல்லாத காலத்தில் தனக்கு கிடைத்த சிறிய படங்களுக்கு பாராமுகம் காட்டுகிறார். இந்தப்படத்தில் நாயகனாக நடித்துள்ள சந்தோஷ் பிரதாப், படம் ஆரம்பிப்பதற்கு முன்பு இருந்து, தற்போது வரை ஒவ்வொரு கட்டத்திலும் உற்சாகமாக தனது பங்களிப்பை தந்து வருகிறார். படம் நன்றாக வந்திருக்கிறது, விருதுகளை வென்றிருக்கிறது, படம் வெளியாகும்போது தனக்கும் நல்ல பெயர் கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் முழு ஒத்துழைப்பையும் வழங்கி வருகிறார். ஆனால் அவருக்கு இருக்கும் நம்பிக்கையில், அர்ப்பணிப்பில் ஒரு சதவீதம் கூட அதுல்யா ரவிக்கு இல்லாமல் போனது துரதிர்ஷ்டம் தான். படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் சம்பந்தப்பட்ட கலைஞர்கள் கலந்துகொண்டே ஆகவேண்டும் என நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் இதற்கான விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்த வேண்டும்” என்கிறார்கள்.