சர்ச்சைக்கு பெயர்போன இயக்குனர்களில் ஒருவர் வேலுபிரபாகரன். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘ ஒரு இயக்குனரின் காதல் டைரி’. இந்த படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பிலேயே தன்னுடைய ‘காதல் கதை’ படத்தில் ஹீரோயினாக நடித்த இளம் நடிகை ஷிர்லே தாஸை திருமணம் செய்துகொண்டார்.
இதன்பின் வேலுபிரபாகரன் தான் இயக்கிய ‘கடவுள்’ படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது இயக்கி வருகிறார். அதில் சேலம் ஆர்.ஆர். பிரியாணி கடையின் உரிமையாளர் தமிழ்ச் செல்வன் ஹீரோவாக நடித்து வருகிறார்.
வேலு பிரபாகரன் மிகப்பெரிய நாத்திகவாதியாக தன்னுடைய ஆரம்பக்காலத்திலிருந்தே மக்களால் அறியப்பட்டு வருகிறார். அதற்கு ‘கடவுள்’ என்ற பெயரில் நாத்திகவாத கொள்கையை வைத்து எடுக்கப்பட்ட அந்த படமே சாட்சி.
இந்நிலையில் கடவுள் 2 படத்தின் ஹீரோ தமிழ்ச்செல்வன் வேண்டுகோளுக்கு இணங்கி வேலுபிரபகாரன் திருச்செந்தூர் முருகன் கோவிலில் தரிசனம் மேற்கொண்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவில் சேலம் ஆர்.ஆர். பிரியாணி கடை உரிமையாளர் பேசுகையில், “ நானும் என்னுடைய இயக்குனரும் திருச்செந்தூர் முருகனை தரிசித்தோம். சிலர் சொல்வார்கள் அவர் இறைவன் மறுப்பு கொள்கை உடையவர் என்று. ஆனால், அவர் இறைவன் மறுப்பாளர் இல்லை, சில மனிதர்களின் கொள்கைக்கு எதிரானவர். இன்று அவரை அழைத்துக்கொண்டு சாமி கும்பிட வைத்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் பூஜைகளில் அமைந்து அவை அனைத்தையும் ஏற்றுக்கொண்டார்” என்றார்.
அவரை தொடர்ந்து பேசிய இயக்குனர் வேலு பிரபாகரன், “இதை ஒரு மகத்தான வாய்ப்பாக நான் பார்க்கிறேன். இவ்வளவ்ய் லட்சக்கணக்கான மக்களுடைய எண்ணங்களும், அவர்களுடைய வேண்டுதல்களும், அவர்களுடைய பரிதவிப்பும் அப்படிப்பட்ட சூழலில் ஒரு இரண்டு மணிநேரம் இருந்தேன். இப்படிப்பட்ட நல்ல வாய்ப்பை தந்த மனிதநேய பண்பாளர், மனிதநேய தலைவர் என்றே இவரை சொல்லலாம்” என்றார்.