Skip to main content

“ஷாருக்கான் யார்; நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்" - அந்தர் பல்டி அடித்த பாஜக முதல்வர்

Published on 23/01/2023 | Edited on 23/01/2023

 

assam cm Himanta Biswa Sarma  about Shah Rukh Khan and pathaan movie

 

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே உள்ளிட்ட பலர் நடிப்பில் இந்தியில் உருவாகியுள்ள படம் 'பதான்'. இப்படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் முதல் பாடலாக வெளியான 'பேஷரம் ரங்' பாடலில் தீபிகா படுகோனே கவர்ச்சியாக காவி நிற உடை அணிந்து நடனமாடியிருக்கிறார் என்ற இந்துத்துவர்களின் விமர்சனத்தால் பெரும் சர்ச்சை எழுந்தது. அது இன்று வரை தொடர்ந்து வருகிறது.

 

முன்னதாக படம் தொடர்பாக பாஜகவை சேர்ந்த மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, அயோத்தியைச் சேர்ந்த சாமியார் பிரமான்ஸ் ஆச்சாரியா, பாஜக எம்.பி பிரக்யா சிங் தாக்கூர் உள்ளிட்ட பலரும் தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்திருந்தனர். மேலும் சில இடங்களில் பதான் படத்தை திரையிடக் கூடாது எனக் கூறி படத்தின் பேனர்கள், பதாகைகளை அடித்து நொறுக்கி வன்முறையில் ஈடுபட்டனர். இதனிடையே அண்மையில் டெல்லியில் நடந்த பாஜக தேசியக்குழு கூட்டத்தில், இனி திரைப்படங்கள் குறித்து பாஜகவினர் யாரும் கருத்து கூற வேண்டாம் என பிரதமர் மோடி வலியுறுத்தியதாகவும் ஒரு தகவல் வெளியானது.

 

இந்த நிலையில் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவிடம் படம் தொடர்பாக வன்முறை நடந்தது குறித்து பத்திரிகையாளர்கள் கேட்டபோது ஷாருக்கான் யார்? அவரைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது எனச் சொல்லியுள்ளார். மேலும் "இந்த பிரச்சனை தொடர்பாக பாலிவுட்டை சேர்ந்த பல பிரபலங்கள் என்னை தொடர்பு கொண்டு பேசினார்கள். ஆனால் ஷாருக்கான் என்னை தொடர்பு கொள்ளவில்லை. அப்படி அவர் அழைத்திருந்தால் இந்த விவகாரம் தொடர்பாக தலையிட்டு பிரச்சனை குறித்து பார்த்திருப்பேன். அவர் அழைத்தால், இந்த பிரச்சனை குறித்து சட்ட ஒழுங்கு மீறப்பட்டிருக்கிறதா., அப்படி மீறியிருந்தால் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்" எனக் கூறினார்.

 

இதையடுத்து அசாம் முதல்வர் அவரது ட்விட்டர் பக்கத்தில் நேற்று, "பாலிவுட் நடிகர் என்னை அதிகாலை 2 மணிக்கு அழைத்தார். படம் குறித்து பேசினோம். படம் தொடர்பாக கவுகாத்தியில் நடந்த சம்பவம் குறித்து கவலை தெரிவித்தார். அதற்கு நான், சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிப்பது மாநில அரசின் கடமை என்று உறுதியளித்தேன். நாங்கள் விசாரித்து, இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் பார்த்துக் கொள்வோம்" என்று கூறியதாக குறிப்பிட்டுள்ளார். பதான் படம் நாளை மறுநாள் 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்