16 ஆவது ஐபிஎல் தொடரில் லீக் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் குஜராத், சென்னை, லக்னோ, மும்பை என 4 அணிகள் ப்ளே ஆஃப் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளன.
சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 157 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் வென்றதினால் சென்னை சூப்பர் கிங்ஸ் 10 ஆவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இத்தொடரில் சென்னையில் நடக்கும் போட்டிகளில் அனைத்திலும் தோனி பேட் செய்ய மைதானத்திற்குள் நுழையும் போது தமிழ் பாடல்கள் ஒலிபரப்பப்படுவது வழக்கம். அப்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆரவாரம் இருக்கும். அந்த வகையில் நேற்று தோனியின் என்ட்ரியின் போது ரஜினி நடித்த 'கபாலி' படத்தின் 'நெருப்புடா.. நெருங்கடா...' பாடல் போடப்பட்டது. இதற்கும் வழக்கம் போல் ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக 'நெருப்புடா..' பாடலை எழுதி பாடிய அருண்ராஜா காமராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதைப் பகிர்ந்துள்ளார்.
மேலும் அந்த பதிவில், "நேர்ல பாக்கலயேங்கற ஒரு சிறு குறை உள்ளுக்குள்ள இருந்தது, ஆனா அது இப்ப இல்ல.. ஒட்டு மொத்த அரங்கும் அதிரும் போது பின்னணி இசையில நம்ம குரல் வரும் போது.. ப்பா… நேர்ல போய் கத்தியிருந்தாலும் இந்த மகிழ்ச்சி வந்துருக்காது.. நன்றி இந்த காட்சிய காண வைத்த அனைவருக்கும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.