இணையத்தை கலக்கும் இரட்டையர்கள் அருண் - அரவிந்த்; தங்களது குடும்பத்தோடு ஒரு சிறப்பு நேர்காணல்...
எங்களுடைய குடும்பம் எப்போதும் கலகலப்பாக இருக்கும். மனைவி வந்த பிறகும் எங்களுடைய வாழ்க்கையை எங்களுடைய போக்கிலேயே நாங்கள் வாழ்கிறோம். எங்களுடைய வளர்ச்சிக்கு தடையாக அவர்கள் எப்போதும் இருந்ததில்லை. கூட்டுக்குடும்பமாக நாங்கள் இருப்பதையே பலர் ஆச்சரியமாகப் பார்க்கின்றனர். எங்களுடைய குழந்தைகளுக்கு இரட்டையர்களில் யார் அப்பா என்கிற சந்தேகமே வராது. இரண்டு குடும்பத்தினருமே அவர்களுக்கு அப்பா அம்மா தான். இதன் மூலம் குழந்தைகள் இன்னும் நம்பிக்கையோடு வாழ முடியும்.
இது குறித்து தவறாகப் பேசுபவர்கள் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. அவர்கள் யாரும் வாழ்க்கையை இன்னும் உணரவில்லை என்றே நினைக்கிறோம். எங்களுடைய திருமண வாழ்க்கையும் நாங்கள் எதிர்பார்த்தது போலவே நடந்தது. நிறைய போராட்டங்களைக் கடந்தே எங்களுடைய திருமணம் நடைபெற்றது. எங்களுக்குள் எப்போதும் ஒரு நல்ல புரிதல் இருக்கிறது. சகோதரர் அமைந்தது போல மனைவியும் எங்களுக்கு அன்பானவர்களாக அமைந்தனர். காதலில் விழுந்த பிறகு வீட்டில் பேசிப் பார்க்கலாம் என்று முடிவு செய்தோம். அதன்படி பேசி எங்களுடைய திருமணம் நடைபெற்றது.
இரட்டையர்களாக நாங்கள் பொய் சொல்ல வேண்டும் என்றாலும் கூட இருவரும் சேர்ந்தே சொல்ல வேண்டும். வெளியே சென்று திரும்பும்போது வீட்டுக்கு வர எவ்வளவு நேரம் ஆகும் என்பதைச் சரியாகச் சொல்லாமல் இருப்பது தான் எங்களுக்கும் மனைவிக்கும் சண்டை வர முக்கியமான காரணமாக இருக்கும். இரட்டையர்களை மையமாக வைத்து வந்த வாலி, ஜீன்ஸ் படங்கள் எங்களுக்கு மிகவும் பிடிக்கும். மாற்றான் படத்தின் இரண்டாம் பாதியில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. எங்கள் இருவரில் ஒருவருக்கு ஏதேனும் வலி ஏற்பட்டால் அதை இன்னொருவராலும் உணர முடியும். எங்களுடைய குழந்தைகளுக்குள்ளும் அந்த அன்பும் ஒற்றுமையும் இருக்கிறது. நாங்கள் இருவரும் ஒன்றாகப் பயணிப்பது தான் எங்களுடைய பலம்.