
எருமசாணி யூ-ட்யூப் பிரபலம் விஜய் குமார் ராஜேந்திரன் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'டி-ப்ளாக்'. இப்படம் ஜூலை 1ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் நாயகன் அருள்நிதியை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்தச் சந்திப்பில் அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...
”எனக்கு வருகிற கதைகள் எல்லாமே திரில்லராகவே வருகிறது. இந்தப் படத்தின் இயக்குநர் விஜய்யின் யூடியூப் வீடியோஸ் பார்த்திருக்கிறேன். நல்லா கலகலப்பா ஜாலியாக இருக்கும். அவர் கதை சொல்ல வந்தபோது ஏதாவது ஜாலியான கதையைச் சொல்லுவார் என தான் எதிர்பார்த்தேன். ஆனால், அவரும் திரில்லர் கதையைத்தான் சொன்னார். அதேநேரம் கதை ரொம்பவும் பிடித்திருந்தது. அதனால் உடனே ஓகே சொன்னேன்.
படத்தில் கதைக்களம் கோயம்புத்தூர். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்தப் படத்தை இயக்குநர் விஜய் எடுத்திருக்கிறார். நான் இதுவரை பண்ண திரில்லர் படங்களில் இருந்து இந்தப் படம் வித்தியாசமாக இருக்கும். சினிமாவில் எனக்கு சில கஷ்டமான விஷயங்கள் உள்ளன. குறிப்பிட்ட வளர்ச்சியை எட்டுவதற்குள் அதை வெளியே காட்டி அதுவே எனக்கு நெகட்டிவ் ஆகிவிடக்கூடாது என்பதால் கொஞ்சம் பெயர் எடுத்தவுடன் கஷ்டமான விஷயங்களை உடைக்கும்படி மற்ற ஜானரிலும் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. அடுத்து லைக்காவில் ஒரு படம் பண்ண இருக்கிறேன். அது ஜாலியான ஆக்ஷன் கலந்த எமோஷ்னல் படமாக இருக்கும். ராட்சசி பட இயக்குநர் கௌதமுடன் இணைந்து ஒரு படம் பண்ண இருக்கிறேன். இந்த மீசை அந்தப் படத்திற்காகத்தான் வைத்திருக்கிறேன். அது வில்லேஜ் ஆக்ஷன் படமாக இருக்கும். திரில்லர் படங்கள் என்னுடைய பலம் என்பதால் அந்த ஜானர் படங்களையும் என்னால் விட்டுவிட முடியாது.
அனைவருக்கும் பிடிக்கக்கூடிய வித்தியாசமான திரில்லர் படமாக 'டி-ப்ளாக்' இருக்கும் என்று நம்புகிறேன். நிச்சயம் திரையரங்கில் வந்து பாருங்கள்”. இவ்வாறு அருள்நிதி தெரிவித்தார்.