இயக்குநர் ஏ.எல்.விஜய், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவித் திரைப்படம் உருவாக்கியுள்ளார். ‘தலைவி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத்தும், எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர். இப்படத்தின் அனைத்துப் பணிகளும் நிறைவடைந்து ரிலீசிற்குத் தயாராக இருந்த நிலையில், கரோனா இரண்டாம் அலை காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் படத்தின் ரிலீஸில் சிக்கல் எழுந்தது. தற்போது இயல்புநிலை திரும்பி வருவதை அடுத்து, மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, தலைவி திரைப்படம் வரும் 10ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவித்துள்ள படக்குழு, படத்திற்கான விளம்பரப்படுத்துதல் நிகழ்ச்சியில் கவனம் செலுத்திவருகிறது.
இந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கங்கனா ரனாவத், அரவிந்த் சாமி, ஏ.எல்.விஜய் உள்ளிட்ட படக்குழுவினரும், திரைப்பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நடிகர் அரவிந்த் சாமி, "இந்தப்படத்தில் நடிக்க வாய்ப்பு தந்ததற்கும் என் மீது நம்பிக்கை வைத்த இயக்குநருக்கும் நன்றி. இரண்டு நாட்களுக்கு முன்தான் படம் பார்த்தேன். ஒரு மாஸ்டர் க்ளாஸ் மாதிரி இருந்தது. கங்கனா, நாசர், மதுபாலா, சமுத்திரக்கனி இவர்களுடன் நான் ஏதோ செய்திருக்கிறேன் என்று தான் தோன்றியது. ஏனெனில் அனைவரது நடிப்பும் மிக அற்புதமாக இருந்தது. இயக்குநர் விஜய்யின் டீடெயிலிங், காட்சிகளில் அவரது நுணுக்கம் ஆகியவை பிரமிப்பாக இருந்தன.
இப்படம் தியேட்டரில் வரவேண்டும் என்று தயாரிப்பாளர்கள் காத்திருந்தார்கள். இத்திரைப்படம் ஓர் அற்புதம். இந்தியாவெங்கும் இப்படத்தை ரசிப்பார்கள். இப்படத்தில் அனைவருமே சிறப்பான பணியைத் தந்துள்ளார்கள். எனக்கு ஆச்சரியமாக இருந்தது ஜீவியின் இசை தான். அந்தக் காலகட்டத்திற்கு ஏற்றவாறும், காட்சிக்கு ஏற்றவாறும் மிகப் பொருத்தமான, பிரமிப்பான இசையை வழங்கியுள்ளார். அவருக்கும் எனது வாழ்த்துகள்" எனக் கூறினார்.