Skip to main content

"ஓப்பன்ஹெய்மரை விட எனக்கு பிடித்திருந்தது" - தேசிய விருது வென்ற படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் வாழ்த்து

Published on 26/08/2023 | Edited on 26/08/2023

 

ar rahman like rocketry better than Oppenheimer

 

இந்தியத் திரைத்துறையில் மிக முக்கிய விருதாகப் பார்க்கப்படும் தேசிய திரைப்பட விருது ஆண்டுதோறும் கலைஞர்களைக் கௌரவிக்கும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2021 ஆம் ஆண்டிற்கான 69வது தேசிய விருது அறிவிப்பு நேற்று முன்தினம் மாலை அறிவிக்கப்பட்டது. 

 

இதில் தமிழ் கலைஞர்கள் மற்றும் தமிழ் படங்கள் என்று பார்க்கையில், சிறந்த தமிழ் திரைப்படம் என்ற பிரிவில் கடைசி விவசாயி வென்றுள்ளது. மேலும் அப்படத்தில் நடித்த மறைந்த விவசாயி நல்லாண்டிக்கு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டது. சிறந்த பின்னணி பாடகி என்ற பிரிவில் இரவின் நிழல் படத்தில் இடம் பெற்ற 'மாயாவா சாயவா...' பாடலுக்காக ஸ்ரேயா கோஷலுக்கு அறிவிக்கப்பட்டது. 

 

அதைத் தவிர்த்து திரைப்படம் சாராத பிரிவில், சிறப்பு விருதாக (ஸ்பெஷல் மென்ஸன்), 'கருவறை' என்ற ஆவணப்படத்திற்காக ஸ்ரீ காந்த் தேவாவிற்கும் சிறந்த கல்வித் திரைப்படம் என்ற பிரிவில் லெனின் இயக்கிய 'சிற்பங்களின் சிற்பங்கள்' படத்திற்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறந்த படம் என்ற பிரிவில் மாதவன் இயக்கி நடித்த 'ராக்கெட்ரி' படத்திற்கும் ஸ்பெஷல் ஜுரி விருது இந்தியில் விஷ்ணுவர்தன் இயக்கிய 'ஷெர்ஷா' படத்திற்கும் கிடைத்துள்ளது. 

 

இந்நிலையில் ஏ.ஆர். ரஹ்மான் தேசிய விருது வென்ற தேவி ஸ்ரீ பிரசாத், ஸ்ரீ காந்த் தேவா, மாதவன் உள்ளிட்டோருக்கு வாழ்த்து தெரிவித்து எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தனித்தனியே ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். அந்த வகையில் மாதவனுக்கு வாழ்த்து தெரிவித்த பதிவில், "வாழ்த்துகள் மாதவன். உங்கள் படத்தை கேன்ஸ் திரைப்பட விழாவில் பார்த்தபோது ஏற்பட்ட தாக்கம் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. ஓப்பன்ஹெய்மர் படத்தை விட உங்களுடைய படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது" எனக் குறிப்பிட்டிருந்தார்.

 

கடந்த வருடம் பிரான்சில் நடந்த உலகப் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் மாதவனின் ராக்கெட்ரி படம் திரையிடப்பட்டது. அந்த நிகழ்வில் கலந்து கொண்டு பார்த்த ஏ.ஆர். ரஹ்மான், "மாதவன் இந்திய சினிமாவிற்கு ஒரு புதிய குரலை கொண்டு வந்திருக்கிறார்" என எக்ஸ் பக்கத்தில் பதிவின் மூலம் பாராட்டியிருந்தார். அந்த பதிவை தற்போது பகிர்ந்து மாதவனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

 

ஹாலிவுட்டின் முன்னணி இயக்குநரான கிறிஸ்டோபர் நோலனின் ஓப்பன்ஹெய்மர் படம் கடந்த மாதம் வெளியாகி உலக அளவில் பலரது கவனத்தை ஈர்த்து தற்போது வரை திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்