
தீனா, ரமணா, கஜினி, துப்பாக்கி என விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பல வெற்றிப்படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். மேலும், அதிக சம்பளம் பெற்று டாப் இயக்குநராகவும் வலம் வந்த இவர் மற்ற மொழிகளிலும் அவரது படங்களை ரீமேக் செய்து அங்கேயும் கவனிக்க வைத்தார். கடைசியாக ரஜினியை வைத்து 'தர்பார்' படத்தை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்ததாக விஜய்யை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாகக் கூறப்பட்டது. சில காரணங்களால் அது கைவிடப்பட தற்போது பல முன்னணி ஹீரோக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
அந்த வகையில், சிம்புவிடம் ஒரு கதை சொல்லி ஓகே வாங்கியுள்ளதாகவும், சிம்புவின் கால்ஷீட்டுக்கு காத்திருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் அடுத்த படத்தைப் பற்றிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி சிவகார்த்தியேனை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தை லைட்ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் மது தயாரிக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளதாக திரைவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'மான் கராத்தே' படத்தினை ஏ.ஆர்.முருகதாஸ் கதை எழுதி தயாரித்து இருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது. சிவகார்த்திகேயன் நடிப்பில் 'அயலான்' படம் உருவாகி வரும் நிலையில், அவர் தற்போது மடோன் அஸ்வின் இயக்கும் 'மாவீரன்' படத்தில் நடித்து வருகிறார். ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தின் விசுவல் எபெக்ட்ஸ் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
சிவகார்த்திகேயன் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பது உறுதியாகும் பட்சத்தில் 'மாவீரன்' படத்துக்கு அடுத்த படமாக இதில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் கம்பேக்கிற்காக காத்திருக்கும் ரசிகர்கள் இந்தத் தகவலினால் மகிழ்ச்சியில் உள்ளனர். இருப்பினும் கம்பேக் வெற்றிகரமாக அமையுமா என்பது அறிவிப்பு வெளியாகி படம் ரிலீசாகும் பட்சத்தில் தான் தெரியும்.