
மோகன்லாலும் மம்மூட்டியும் பல வருடங்களாக நண்பர்களாக இருந்து வருகின்றனர். இந்த சூழலில் மம்மூட்டிக்கு புற்றுநோய் எனத் சமீபத்தில் ஒரு தகவல் வெளியானது. ஆனால் இதை அவர் தரப்பு மறுத்தது. பின்பு மோகன்லால் தான் நடித்த ‘எல்2; எம்புரான்’ பட வெளியீட்டில் பிஸியாக இருந்த போது கடந்த சில தினங்களுக்கு முன்பு சபரி மலையில் மம்மூட்டியின் முழுப் பெயரான ‘முகமது குட்டி’ பெயரில் உஷ பூஜை செய்தார். இது தொடர்பான ரசீது சமூக வலைதளங்களில் வெளியானது.
இந்த ரசீது குறித்து ‘எல்2; எம்புரான்’ பட சென்னை நிகழ்ச்சியில் பேசிய மோகன்லால், “அந்த ரசீதை தேவஸ்தானத்தில் இருப்பவர்கள் அல்லது யாரோ ஒருவர் லீக் செய்துவிட்டனர்” எனக் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து சபரி மலை தேவஸ்தானத்தில் இருந்து எங்கள் ஊழியர்கள் யாரும் ரசீதை வெளியிடவில்லை என மறுத்து மோகன்லால் தவறுதலாகக் கூறியிருப்பார் என கூறியிருந்தனர்.

இந்த நிலையில் ஒரு இந்து கோவிலில் ஒரு முஸ்லிமுக்கு பூஜை செய்ததற்காக மோகன்லால் முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பத்திரிகையாளரும் அரசியல் ஆய்வாளருமான ஓ. அப்துல்லா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஆடியோ குறிப்பில், “மம்மூட்டிக்கு தெரியாமல் மோகன்லால் பூஜை செய்திருந்தால் அதில் ஒன்றும் தவறில்லை. ஆனால் மம்மூட்டிக்குத் தெரிந்து செய்திருந்தால் மம்மூட்டியும் முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இது பெரிய தவறு.
ஐயப்பன் மீது மோகன்லாலுக்கு பெரிய நம்பிக்கை இருக்கலாம். அதனடிப்படையில் அவர் மம்மூட்டி பெயரில் பூஜை செய்திருக்கலாம். ஆனால் மம்மூட்டிக்கு தெரிந்து நடந்திருந்தால் அது ஒரு பெரிய குற்றம். இஸ்லாமிய நம்பிக்கைகளின்படி, யாரும் அல்லாவைத் தவிர வேறு யாருக்கும் எதையும் காணிக்கையாகக் கொடுக்கக்கூடாது. இது ஒரு விதிமீறல். இது குறித்து மம்மூட்டி விளக்கம் அளிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார். இது ஒரு புறம் இருக்க எக்ஸ் வலைதளத்தில் மம்மூட்டி மோகன்லாலுக்கு எம்புரான் பட வெளியீடு தொடர்பாக வாழ்த்தியுள்ளார். அதற்கு மோகன்லாலும் தனது எக்ஸ் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.