காவிரியில் தமிழகத்திற்கு உரிய நீரைத் திறக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் வலியுறுத்திய நிலையில், தமிழகத்தில் விவசாய அமைப்புகள், விவசாயிகள் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைச் செயல்படுத்த வேண்டும்; தமிழகத்திற்குக் காவிரியில் நீர் திறக்க வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோல கர்நாடகாவில், தமிழகத்திற்குத் தண்ணீர் வழங்கக் கூடாது என்பதை வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்திற்குக் காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நேற்று முன்தினம் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. மேலும் விவசாயிகள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனிடையே கன்னட திரையுலகை சார்ந்த பிரபலங்கள் பலரும் அவர்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். முன்னணி நடிகர்களான சிவராஜ் குமார், கிச்சா சுதீப் உள்ளிட்டோர் இரு அரசுகளும் பேசி சுமூகமாக முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர். இந்நிலையில் ‘சித்தா’ திரைப்படத்தின் புரொமோசனுக்கான செய்தியாளர் சந்திப்பிற்கு கர்நாடகாவிற்கு சென்ற இடத்தில் நடிகர் சித்தார்த் பேசிக்கொண்டிருக்கும் போதே கன்னட அமைப்பினர் அரங்கில் நுழைந்து நிகழ்ச்சியை நடக்கவிடாமல் செய்தனர். நடிகர் சித்தார்த் அரங்கை விட்டு வெளியேறினார். இதற்கு நடிகர் பிரகாஷ் ராஜ் மன்னிப்பு கேட்டுள்ளார்
பிரகாஷ்ராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் "பல ஆண்டுகளாக காவிரி நதிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண முடியாத அரசியல் கட்சிகளையும், ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்காத நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கேள்வி கேட்காமல், சாமானிய மக்களுக்கும், திரைக் கலைஞர்களுக்கும் தொந்தரவு கொடுப்பதை எந்த வகையிலும் ஏற்க முடியாது; ஒரு கன்னடிகனாக, கன்னடியர்களின் சார்பாக நான் மன்னிப்பு கேட்கிறேன்... சாரி சித்தார்த்" என்றிருக்கிறார்.