சின்னத்திரை, வெள்ளித்திரை என எதுவாயினும், தனது தனித்த திறமையால் உயர்ந்து, புகழ்பெற்றவர் (திவ்யதர்ஷினி) டி.டி.நீலகண்டன். தனது கலகலப்பான பேச்சின் மூலம் அனைவரின் மனதிலும் நீங்கா இடம்பிடித்தவர் டிடி. இப்படிப் பன்முகத் திறமையால் அறியப்பட்டவர், இப்போது இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார்.
கடந்த 2015- ஆம் ஆண்டு பிரித்திவிராஜ், பார்வதி நடிப்பில், மலையாளத்தில் வெளியான படம் 'என்னு நிண்டே மொய்தின்'. இப்படத்தில் வரும் 'முக்கத்தே பெண்ணே' பாடல் உலகம் முழுவதும் பலரால், ரசிக்கப்படும் பாடல். இப்பாடலை மீட்டுருவாக்கம் செய்து தனது இயக்கத்தில் வெளியிட்டுள்ளார் டி.டி.நீலகண்டன். இந்தப் பாடலில் அவரே நடித்தும் உள்ளார்.
இதுகுறித்து டி.டி.நீலகண்டன் கூறும்போது, "மிகச் சில காதல் பாடல்களே, மிக உயரிய உணர்ச்சிகளை நமக்குள் கடத்தும். அவை, உங்கள் கண்களை ஈரமாக்கும். இதயத் துடிப்பை நிறுத்தி, உங்கள் உதடுகளில், சோகப் புன்னகையை மலரச் செய்யும். அவை, நமது உள்ளத்துடன் ஒரு ஆழ்ந்த உரையாடலை நிகழ்த்தும். அந்த வகையில், 'முக்கத்தே பெண்ணே' மிக அற்புதமான ஒரு பாடல். இப்பாடல், கேட்போரை உணர்ச்சிகளால் உருக்கிவிடும். அப்படி உருகக்கூடிய பலருள், நானும் ஒருவள். நான் இந்தப் பாடலுக்கு அடிமையாகிவிட்டேன். இப்பாடலைக் கேட்கும்போது, 'காதல்', 'பிரிவு', 'சந்தோசம்' எனும் உணர்வுகளின் கலவை, நம் கண்முன்னே விரிகிறது. இதையெல்லாம் தாண்டி, இப்படத்தின் அதிதீவிர ரசிகை நான். அதிலும், அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ள பிரித்திவிராஜ் மற்றும் பார்வதியை வெகுவாக ரசித்தேன்.
நான் மீட்டுருவாக்கம் செய்த இப்பாடலுக்குத் தனது குரலின் மூலம் சுவைகூட்டிய நிகில் மேத்யூவிற்கு நன்றி. இப்பாடலின் மிகப் பெரிய சொத்து எனது சக நடிகர் க்ரிஷ். அவர் சிறப்பான பணியை இப்பாடலுக்காகச் செய்துள்ளார். ரசிகர்கள் எனது முயற்சியை ரசிப்பார்கள் என்று நம்புகிறேன். ஒரிஜினல் பாடலில் உண்மையான மேஜிக்கை நிகழ்த்திய, பிரித்திவிராஜ், பார்வதி, கோபி சுந்தர் மற்றும் இயக்குனர் V.S.விமல் ஆகியோர் எண்ணற்ற பலரை இப்பாடலின் மூலம் ஊக்குவிக்கிறார்கள், அவர்களுக்கு நன்றி. சத்தியபாமா பல்கலைக்கழக இயக்குனர் மரியா ஜீனா ஜான்சன் அவர்களுக்கு நான் கடன்பட்டிருக்கிறேன். இந்த யோசனையை நான் சாதாரணமாகப் பகிர்ந்தபோது, அவர் உடனே என்னை ஊக்கப்படுத்தினார். இந்தப் பாடல் உருவாவதற்கு, எனக்குப் பல உதவிகள் செய்துள்ளார்" இவ்வாறு தெரிவித்தார்.
டி.டி.நீலகண்டன் இப்பாடலை உருவாக்கி, நடித்து, இயக்கியுள்ளார். இப்பாடலை நிகில் மேத்யூ பாடியுள்ளார். இஷான் தேவ் பின்னணி பாடியுள்ளார். திலீப் ஹார்னர் (கீஸ்), அக்கர்ஸ் N காஷ்யப் (வயலின்), இஷான் தேவ் (மிக்ஸ் & மாஸ்டர்), கவிதா தாமோதரன் (எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர்), சுதர்சன் (ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, டிஐ), அஷ்வின் தியாகராஜன் (உடைகள்), MS பிங்க் பேந்தர் (ஜிவல்லரி), இப்ராஹிம் & ராகவன் (மேக்கப் & ஹேர் ஸ்டைலிஸ்ட்), பிரசாந்த் (கிம்பல் ஆபரேட்டர்), பிரதீப் ராஜா, கோபி கிரிஷ் & சுவாகத் (ஒளிப்பதிவுக் குழு) ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்
'முக்கத்தே பெண்ணே' என்னும் இப்பாடல் இடம்பெற்றுள்ள 'என்னு நிண்டே மொய்தின்' திரைப்படம், 1960 மற்றும் 70களில், கேரளாவின் கோழிக்கோட்டைச் சேர்ந்த 'முக்கம்' என்னும் நகரில் நடக்கும் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.