ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ஆர்.ஆர்.ஆர். இப்படம் 2023 ஆம் ஆண்டு நடக்கும் ஆஸ்கர் விருது போட்டிக்கு இந்தியா சார்பாக அனுப்பப்படும் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் 95வது ஆஸ்கர் விருது போட்டியில் இந்தியா சார்பாக குஜராத்தி படம் 'செல்லோ ஷோ' தேர்வானதால் தனிப்பட்ட முயற்சியில் 15 பிரிவுகளின் கீழ் ஆஸ்கருக்கு ஆர்.ஆர்.ஆர் படக்குழு விண்ணப்பித்துள்ளது. இதன் காரணமாக தீவிர ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் ராஜமௌலி.
இதனிடையே, திரைத்துறையில் ஆஸ்கருக்கு அடுத்தபடியாகக் கருதப்படும் கோல்டன் குளோப் விருதுக்கு ஆங்கில மொழி அல்லாத படத்திற்கான பிரிவில் ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படமும், சிறந்த பாடல் பிரிவில் 'நாட்டு நாட்டு’ பாடலும் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில், சிறந்த பாடல் பிரிவில் 'நாட்டு நாட்டு’ பாடல் கோல்டன் குளோப் விருதைத் தட்டிச் சென்றுள்ளது. இதற்காக இசையமைப்பாளர் கீரவாணி விருதைப் பெற்றார். இது தொடர்பாக ‘ஆர்ஆர்ஆர்’ படக்குழுவையும் கீரவாணியையும் ரசிகர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
அந்த வகையில், ஷாருக்கான், ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜா உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்த நிலையில், மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தைப் புகழ்ந்து தள்ளியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "நடனம் மற்றும் உலகம் உங்களுடன் நடனமாடுகிறது. கோல்டன் குளோப் விருது பெற்றதற்கு ‘ஆர்ஆர்ஆர்’ படக்குழுவுக்கு நன்றி. இந்தியாவின் உலகளாவிய பிராண்ட் எப்படி இருக்க வேண்டும் என்பதை எங்களுக்குக் காட்டியுள்ளீர்கள். அந்நாட்டு மக்கள் பாடிக்கொண்டே நடனமாடியும் மகிழ்கின்றனர்." எனக் குறிப்பிட்டுள்ளார். அதோடு ஒரு திரையரங்கில் 'நாட்டு நாட்டு’ பாட்டுக்கு மக்கள் நடனமாடும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
Dance and the world dances with you. Thank you #RRR, thank you #NaatuNaatu for winning at the #GoldenGlobes and showing us what India’s global brand should be: A country that can make people sing & dance together. Vasudhaiva Kutumbakam 👏🏽👏🏽👏🏽 pic.twitter.com/4GihzD1k3b— anand mahindra (@anandmahindra) January 11, 2023