சின்னத்திரையில் அமுதகானம் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமடைந்த ஆதவன் அவர்களை நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக சந்தித்தோம். நம்மிடையே பல்வேறு தகவல்களையும், தன்னுடைய அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.
ஆதவன் பேசியதாவது “இன்று இசையமைக்க கூடியவர்கள் அனைவரும் பொற்கால கட்டத்து அமுதகானம் பாடல்களிலிருந்து தான் கொடுத்தாக வேண்டும். மெல்லிசை மாமன்னர்கள், கே.வி.மகாதேவன், வி.குமார் போன்ற இசை ஜாம்பவான்களை நினைக்காமல் அந்த கால கட்டப் பாடல்களை பாடல்களை நினைவூட்டாமல் யாருமே இசையமைக்க முடியாது. அது வித்யாசாகர், ஏ.ஆர்.ரகுமான், இசைஞானி இளையராஜா யாராக இருந்தாலும், இன்றிருக்கிற அனிருத் வரை அதான் நிலை. பழைய இசையை எடுத்து புதிய வெந்நீர் பானையில் வேண்டுமானால் போட்டு கொடுங்கள். ஆனால் இசை பழையது. எளிய மனிதரிலிருந்து பெரியவர்களான நாட்டை ஆள்பவர்கள் வரை அமுதகானத்திற்கு ரசிகர்களாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனை பேட்டியெடுக்க தனியார் தொலைக்காட்சியை அணுகிய போது அவரே சொன்னார் அமுதகானம் ஆதவனை என்னை பேட்டி எடுக்க வையுங்கள் என்று, பிறகு அவரைப் பார்க்க போன போது காலில் விழுந்தேன். என்னை தூக்கி நிறுத்தியவர் உங்களின் ரசிகன் நான் என்றார். என் வாழ்நாளில் அதை விட பெரிய விருது எனக்கு கிடைக்குமா என்ன? இவர்களை எல்லாம் நான் பார்ப்பேனா என்று இருந்த போது பல ஜாம்பவான்களை நான் பார்க்க காரணமாக இருந்தது இந்த அமுதகானம் நிகழ்ச்சி தான்.