Skip to main content

“சாதி - மதம் கடந்த மனிதநேயப் பண்பாளர்” - அமீர் இரங்கல்

Published on 28/12/2023 | Edited on 28/12/2023
ameer condolence for vijayakanth

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். விஜயகாந்தின் மருத்துவ பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், விஜயகாந்த் இன்று (28-12-23) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

இவரது மறைவு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கூட்டம் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தி வந்தனர். இதையடுத்து அவரது உடல் தேமுதிக அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை செய்யப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். நாளை மாலை 4.45 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது. 

இந்த நிலையில் அமீர் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “ஏழைகளின் தோழன், எளியவர்களின் பாதுகாவலன், அநீதியைத் தட்டிக் கேட்கும் துணிச்சல்காரர் என்று நிஜ நாயகனாகவே வாழ்ந்த தே.மு.தி.க. தலைவர் கேப்டன் விஜயகாந்த் மறைவு உண்மையிலேயே தமிழ்த் திரையுலகுக்கும். இந்திய அரசியலுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். திரைப்படங்களில் நல்லவர்களாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர்களுக்கு மத்தியில், திரையிலும், தரையிலும் நல்லவராகவே வாழ்ந்தவர் கேப்டன் விஜயகாந்த். அவருடன் மறுபடியும் பேசி அளவளாவும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பிக்கையோடு இருந்த என்னை, அவரது திடீர் மறைவு, பேரதிர்ச்சியிலும், மீளாத்துயரிலும் ஆழ்த்தியுள்ளது.

இன்றைய தினத்தில் உச்ச நடிகராகவும் இல்லாமல், அரசியலில் பெரும் பதவியிலும் இல்லாமல் இருந்தாலும் ஒட்டுமொத்த தமிழக மக்களின் இதயத்திலும் நீங்கா இடம் பெற்றிருக்கும், சாதி - மதம் கடந்த மனிதநேயப் பண்பாளர். எங்களது ‘மண்ணின் மைந்தன்’ கேப்டன் விஜயகாந்த் ஆன்மா, இறைவன் திருவடி நிழலில் அமைதியடைய வேண்டுகிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்

Next Story

விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்குவதில் தாமதம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
padma bhushan award will be presented to Vijayakanth in the next phase of the ceremony.

மத்திய அரசால், இந்திய குடிமகனுக்கான உயரிய விருதுகளாக பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் என மூன்று அடுக்குகளாக இந்த விருதுகள் இருக்கிறது. இந்த விருதுகளுக்காக மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு, சமூக பணி, என பல்வேறு தளங்களில் சிறப்பாக பணியாற்றியவர்களை பரிந்துரை செய்யப்பட்டு பின்னர், விருது வழங்கும் குழுவால் தேர்வு செய்யப்படுகிறார்கள். 

அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு கடந்த ஜனவரியில் அறிவித்தது. இதில் மறைந்த நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக அவருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

padma bhushan award will be presented to Vijayakanth in the next phase of the ceremony.

பத்ம விருதுகள் வழங்கும் விழா, டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (22.04.2024) நடைபெற்ற விழாவில் 3 பத்ம விபூஷன், 8 பத்ம பூஷன் மற்றும் 55 பத்மஸ்ரீ விருதுகளும் வழங்கப்பட்டன. அனைவருக்கும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்கினார். இதில் பிரபல பாடகி உஷா உதூப் மற்றும் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி ஆகியோருக்கு பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும் முன்னாள் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவுக்கும் பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.

நேற்றைய விழாவில் மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்கப்படுவதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு விருது வழங்கப்படவில்லை. அதனால் அடுத்தடுத்த கட்ட விழாக்களில் விஜயகாந்துக்கு விருது வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

நள்ளிரவு வரை நடந்த ரெய்டு - சிக்கலில் அமீர்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
ameer about ed raid and ncb investigation regards jaffer sadiq

உணவுப் பொருள் ஏற்றுமதி என்ற பெயரில், இந்தியாவில் இருந்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு போதைப் பொருள் கடத்திய புகாரில் டெல்லியில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, போதைப் பொருள் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக்கையும் அவரது கூட்டாளியையும் என்சிபி அதிகரிகள் கைது செய்தனர். போதைப்பொருள் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட ஜாபர் சாதிக்கிடம் தீவிர விசாரணை செய்த என்சிபி அதிகாரிகள் அவருக்கு நெருங்கிய வட்டாரத்தை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர். ஜாபர் சாதிக் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக ஜாபர் சாதிக்கின் நெருங்கிய வட்டாரத்தைச் சேர்ந்த தமிழ் திரைப்பட இயக்குநரும், நடிகருமான அமீருக்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பினர். அமீருடன் சேர்த்து அப்துல் பாசித் புகாரி, சையது இப்ராஹிம் ஆகிய 3 பேருக்கு டெல்லி என்சிபி அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர். அதன்படி, டெல்லி ஆர்.கே.புரம் 1-வது செக்டரில் உள்ள என்சிபி தலைமை அலுவலகத்தில் அமீர் தனது வழக்கறிஞர்களுடன் கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி ஆஜரானார். அவரிடம் 11 மணி நேரம் விசாரணை நடத்திய என்சிபி அதிகாரிகள், வாக்குமூலங்கள் பதிவு செய்துகொண்டதாக தகவல் வெளியாகியது. இதனிடையே, ஜாபர் சாதிக் போதைப் பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய வருவாயை சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்தது மற்றும் சட்டவிரோதமாக முதலீடு செய்தது போன்ற விவரங்களை பெற்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் தானாக முன்வந்து வழக்கு ஒன்று பதிவு செய்ததாக தகவல் வெளியானது. தொடர்ந்து, ஜாபர் சாதிக்கின் போதைப் பொருள் கடத்தல் தொடர்பான ஆவணங்களைக் கையிலெடுத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒரு புறம் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.       

இந்த நிலையில், திடீரென கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி காலையிலேயே அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஜாபர் சாதிக் தொடர்புடைய சுமார் 35 இடங்களில் சோதனை மேற்கொண்டனர். இதில், சென்னை சாந்தோம் பகுதியில் உள்ள ஜாபர் சாதிக் இல்லத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் அமலாக்கதுறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதுமட்டுமல்லாமல் ஜாபர் சாதிக்குடன் தொடர்பில் இருந்த இயக்குநர் அமீர் வீடு மற்றும் தி நகர் பகுதியில் உள்ள அலுவலகத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக்கும், இயக்குநர் அமீரும் நண்பர்கள் என்பதாலும், போதைப் பொருள் கடத்தலில் ஈட்டிய பணத்தை திரைப்படத்துறையில் ஜாபர் சாதிக் முதலீடு செய்தாரா என்ற கோணத்திலும் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியதாக தகவல் வெளியாகியது. அதேபோல், ஜாபர் சாதிக்குடன் சினிமா தொடர்பான வேலைகளில் ஈடுபட்டு வந்த கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் இல்லத்திலும், புரசைவாக்கம் பகுதியில் உள்ள அலுவலகத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். 

காலையில் தொடங்கிய அமலாக்கத்துறை சோதனை இரவு 12 மணி வரை சென்றது. சோதனை முடிவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றதாக தகவல் வெளியாகியது. அமலாக்கத்துறை சோதனை முடிந்த அடுத்த நாளே மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்புத் தொழுகையில் இயக்குநர் அமீர் பங்கேற்றார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த இயக்குநர் அமீர், ரம்ஜான் வாழ்த்துக்களை ரசிகர்களுக்கு தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பேசிய அமீர், ''11 மணி நேரம் என்.சி.பி விசாரணை நடந்தது உண்மைதான். வீடு, அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடந்ததும் உண்மை தான். சோதனை முடிவில் அமலாக்கத்துறை சில ஆவணங்களை எடுத்து சென்றுள்ளனர். அது என்ன ஆவணங்கள் என்று அவர்களே சொல்வார்கள். எந்த விசாரணைக்கும் நான் தயார் நிலையில் இருக்கிறேன். சமூக வலைத்தளங்களில் என் மீது சொல்லப்படுகிற குற்றச்சாட்டுக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அதை நிரூபிப்பேன். விசாரணை இப்போது நடந்து வருவதால் என்னால் மேற்கொண்டு எதுவும் பேச முடியாது. அமலாக்கத்துறை சோதனை இரவு 12 மணிக்குத்தான் முடிந்தது.

விசாரணை நேர்மையாக தான் நடக்கிறது. ஆனால் விசாரணைக்கு அழுத்தம் இருக்கிறதா என்பது எனக்கு தெரியாது. எப்போதும் போல என்னிடம் இருந்து வருகின்ற ஒரே வார்த்தை இறைவன் மிகப்பெரியவன்..’ என்று இயக்குநர் அமீர் நடைபெறும் விசாரணை குறித்து தகவல் தெரிவித்தார். முன்னதாக என்சிபி இரண்டாவது முறையாக நேரில் ஆஜராக இயக்குநர் அமீருக்கு சம்மன் அனுப்பியதாவும், அவர் நேரில் ஆஜராக அவகாசம் கேட்டதாகவும் தகவல் வெளியாகியது. ஆனால் இயக்குநர் அமீர், என்.சி.பி.யின் இரண்டாம் கட்ட விசாரணைக்கோ, என்னிடம் உள்ள சொத்து ஆவணங்களை அறிக்கையாக தாக்கல் செய்யவோ நான் எந்தவொரு கால அவகாசமும் கேட்கவில்லை எனத் தகவல் தெரிவித்துள்ளார். இதனிடையே, 2020 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையில் அமீர் பெயரிலும் அவரது குடும்பத்தினர் பெயரிலும் வாங்கப்பட்ட சொத்துக்கள் என்னென்ன, இந்த காலகட்டத்தில் வங்கி பரிவர்த்தனை என்னென்ன என்ற விவரங்களை அதிகாரிகள் திரட்டி விசாரணை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  இரண்டாவது முறையாக என்சிபி அதிகாரிகளிடம் இயக்குநர் அமீர் ஆஜராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கின் போதைப் பொருள் வழக்கை என்சிபி அதிகாரிகள் தீவிரமாக கையில் எடுத்து இருப்பது தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது.