அனூப் எஸ் பணிக்கர் இயக்கத்தில் அமலா பால், அதுல்யா ரவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் கடவார். அமலா பால் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகியுள்ள இப்படம், வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள நிலையில், படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.
நிகழ்வில் நடிகை அமலா பால் பேசுகையில், “இது 2019ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட படம். அன்றிலிருந்து இன்றுவரை இந்தப் படத்தோடு தொடர்புடைய எல்லோரது வாழ்க்கையிலும் நிறைய மாற்றங்கள் நடந்துள்ளன. குழந்தையை 9 மாதம் சுமப்பதுபோல இந்தக் குழந்தையை 4 ஆண்டுகள் சுமந்தோம். இந்தப் படத்தின் கதாபாத்திரத்திற்காக நானும் இயக்குநரும் நிறைய ஹாஸ்பிட்டலுக்கு சென்று ரிசர்ச் செய்தோம்.
இந்த பத்ரா என்ற கதாபாத்திரம் 2019ஆம் ஆண்டு என் வாழ்க்கையில் வந்தது. என் அப்பா 2020ஆம் ஆண்டு இறந்தார். பத்ரா கதாபாத்திரம் என்னை ரொம்பவும் வலிமையான ஆளாக மாற்றியிருப்பதை அந்த நேரத்தில் உணர்ந்தேன். இந்தப் படத்தில் நடிக்கவில்லை என்றால் அந்தத் தருணத்தை எப்படி கடந்திருப்பேன் என்று தெரியவில்லை. அதனால் இந்தப் படத்திற்கும் கதாபாத்திரத்திற்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.
படத்தில் நான் க்ளாமராக இல்லை, படம் சீரியஸா இருக்கு, அதனால் இது தியேட்டர் கண்டண்ட் இல்லை என்று நிறைய விநியோகஸ்தர்கள் சொன்னார்கள். ஆனால், ட்ரைலர் வெளியான பிறகு படத்தை திரையரங்கில் வெளியிடலாமே என்று நிறைய பேர் சொன்னார்கள். இது மாதிரியான கதை கொண்ட படங்கள் திரையரங்கில் வெளியாக இந்தப் படம் ஒரு தொடக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்தப் படத்தை வெளியிட முன்வந்த ஹாட்ஸ்டார் நிறுவனத்திற்கு நன்றி. படம் ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியாகிறது. அனைவருக்கும் படம் பார்த்துவிட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள்” எனத் தெரிவித்தார்.