'புஷ்பா' பட வெற்றிக்குப் பிறகு அதன் இரண்டாம் பாகமான ‘புஷ்பா 2 - தி ரூல்’ படம் கடந்த 5ஆம் தேதி வெளியாகியிருந்தது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இப்படத்தின் சிறப்பு காட்சியில் ஒரு சோக சம்பவம் நடந்தது. ஹைதராபாத்திலுள்ள சந்தியா திரையரங்கில் சிறப்பு காட்சி திரையிடப்பட்ட போது, அங்கு எந்த முன் அறிவிப்பும் இன்றி அல்லு அர்ஜூன் சென்றார். திடீரென அவரை பார்த்ததால் ரசிகர்கள் அனைவரும் அவரை நோக்கி ஓடினார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி(39) என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகன் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக புஷ்பா 2 படக்குழு, உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ஆதரவாக இருப்பதாகத் தெரிவித்திருந்தது.
இந்த சம்பவ எதிரொலியாக தெலங்கானா அரசு வரும் காலங்களில் சிறப்புக் காட்சிக்கு தடை விதித்தது. இதையடுத்து அல்லு அர்ஜுன், அவரது பாதுகாப்புக் குழு மற்றும் சம்பந்தப்பட்ட திரையரங்கம் மீது ஹைதராபாத் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அல்லு அர்ஜூன் மீது எந்த முன்னறிவிப்பும் இன்றி வந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதனையடுத்து அல்லு அர்ஜூன் அப்பெண்ணின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு தருவதாக உத்தரவாதம் கொடுத்தார். மேலும் சிகிச்சைப் பெற்று வரும் சிறுவனின் மருத்துவச் செலவை ஏற்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட தியேட்டர் உரிமையாளர், மேலாளர், பால்கனி மேற்பார்வையாளர் என மூன்று பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இதனிடையே அல்லு அர்ஜூன் தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி தெலுங்கானா உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த நிலையில் அல்லு அர்ஜூன் இன்று கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் இருந்து சிக்கட்பள்ளி காவல் நிலையத்திற்கு காவல் துறையினரால் அழைத்து செல்லப்பட்டார். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காவல் நிலையத்தின் விசாரணைக்குப் பிறகு ஹைதராபாத் நாம்பள்ளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது 14 நாட்கள் அவர் நீதிமன்ற காவலில் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இது ஒருபுறம் இருக்க அல்லு அர்ஜூன் தரப்பில் ஜாமீன் கோரி தெலுங்கானா உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.