இந்தி சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அக்ஷய் குமார். 'பச்சன் பாண்டே' படத்தை தொடர்ந்து 'சாம்ராட் பிரித்விராஜ்' படத்தில் நடித்துள்ளார். மன்னர் பிரித்விராஜ் சவுகான் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் பிரித்விராஜ் சவுகான் கதாபாத்திரத்தில் அக்ஷய் குமார் நடிக்க, கதாநாயகியாக மனுஷி சில்லர் நடித்துள்ளார். மனுஷி சில்லர், 2017-ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சஞ்சய் தத், சோனு சூட், அஷுதோஸ் ராணா, லலித் திவாரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ்' தயாரித்துள்ள இப்படத்தை சந்திர பிரகாஷ் திவேதி இயக்கியுள்ளார். வரலாற்று படமாக உருவாகியுள்ள இப்படம் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இன்று வெளியாகியுள்ளது.
இந்நிலையில் 'சாம்ராட் பிரித்விராஜ்' படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஓமன் மற்றும் குவைத் நாட்டில் இப்படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. குவைத்தில், சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'பீஸ்ட்', துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான 'குருப்' மற்றும் விஷ்ணு விஷால் நடித்த 'எப்.ஐ.ஆர்' ஆகிய படங்களுக்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே இந்தியாவில் உத்தரப்பிரதேசம் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு இப்படத்தின் சிறப்பு காட்சி போடப்பட்டது. படத்தை பார்த்த அவர் இப்படத்திற்கு வரி விளக்கு தரக்கோரி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து உத்தரகாண்ட் மற்றும் மத்தியப் பிரதேசம் மாநிலங்களிலும் 'சாம்ராட் பிரித்விராஜ்' படத்திற்கு வரி விளக்கு அளிக்கப்பட்டுள்ளது.