பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் அக்ஷய் குமார், தற்போது சூரரைப் போற்று படத்தின் இந்தி ரீமேக் 'காப்ஸ்யூல் கில்', 'ஓ மை காட் 2' உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான செல்பி படம் படுதோல்வியை சந்தித்துள்ளது. வசூலிலும் வெறும் ரூ. 2.50 கோடி மட்டுமே முதல் நாள் ஈட்டியுள்ளதாக கூறப்படுவதோடு மோசமான விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது.
இப்படம் மட்டுமல்லாமல் அக்ஷய் குமாரின் கடைசி படங்களான 'சாம்ராட் பிருத்விராஜ்', 'ரக்ஷா பந்தன்', 'கட்புட்லி', 'ராம் சேது' ஆகியவை படுதோல்வி அடைந்தன. இந்த நிலையில், அக்ஷய் குமார் தன் படங்களின் தொடர் தோல்விக்கு தானே காரணம் எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஒரு பேட்டியில் பேசிய அவர், "இப்படி நடப்பது எனக்கு முதன்முறையல்ல. என்னுடைய திரை பயணத்தில் ஒரே நேரத்தில் 16 தோல்விப் படங்களை கொடுத்திருக்கிறேன். ஒரு காலத்தில் 8 படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்துள்ளன. இப்போது அந்த லிஸ்டில் எனது கடைசி நான்கு படங்கள் இணைந்துவிட்டன. படங்கள் வெற்றி பெறாததற்கு நான் தான் காரணம்.
தொடர்ந்து படங்கள் தோல்வியை சந்திக்கிறது என்றால் நாம் மாற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அர்த்தம். ரசிகர்களையும் மற்றவர்களையும் குறை சொல்ல முடியாது. இது முழுக்க முழுக்க என்னுடைய தவறு தான். ஒருவேளை எனது படங்களில் சரியான அம்சங்கள் இல்லாமல் இருந்திருக்கலாம்” என அக்ஷய் குமார் தெரிவித்துள்ளார்.