
தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவான அஜித்குமார் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். அவர்களை குஷிப்படுத்தும் விதமாக கடைசியாக 'துணிவு' என்ற வெற்றிப்படத்தை கொடுத்திருந்தார். இதையடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனால் சில காரணங்களால் அவர் விலகிவிட்டார்.
விக்னேஷ் சிவனுக்கு பதில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது. இதனால் அஜித் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர். இந்த நிலையில் அஜித்தின் 52வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகின்றனர் அவரது ரசிகர்கள்.
மே 1 அன்று (01.05.2023) மாலை டைட்டிலுடன் 'ஏகே 62' பட அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளதாக கடந்த சில தினங்கள் முன் தகவல் வெளியானது. இது ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என அஜித் இந்த அறிவிப்பை வெளியிட படக்குழுவிடம் சொன்னதாக திரைவட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில் அஜித்தின் அடுத்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு முன்னதாகவே வெளியாகியுள்ளது.
அஜித்தின் 62ஆவது படத்திற்கு விடாமுயற்சி என பெயரிடப்பட்டுள்ளது. மகிழ் திருமேனி இயக்கத்தில் நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். படத்தின் பெயர், இயக்குநர், ஒளிப்பதிவாளர், இசை அமைப்பாளர் என்பது குறித்தான தகவல்கள் மட்டுமே போஸ்டரில் இடம் பெற்றுள்ளன. பைக் சுற்றுப்பயணம் முடித்து வந்து அஜித்குமார் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் எனத் தெரிகிறது.