ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'லால் சலாம்'. இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் 'மொய்தீன் பாய்' என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளார். லைகா தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
பிப்ரவரி 9ல் படம் வெளியாகவுள்ளதால் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள சாய் ராம் கல்லூரியில் நடைபெற்றது. இதில் ரஜினி, ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஏ.ஆர். ரஹ்மான், விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் பங்கேற்றனர். அப்போது படம் குறித்து நிறைய விஷயங்களைப் பேசிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ரஜினி குறித்து பேசுகையில், “அப்பா எனக்கு படம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. இந்த படத்தில் அவர் நடிக்க ஒப்புக்கொண்டது, எனக்காக மட்டுமில்லை. இதை ஆழமாக பதிவு பண்ணிக்கொள்கிறேன். படம் சொல்கிற மெசேஜ், அது சொல்கிற தத்துவம் அதற்காத் தான் ஒத்துக்கிட்டார்.
அவரை சங்கின்னு சொல்றாங்க. அது எனக்குப் பிடிக்கவில்லை. ரஜினிகாந்த் சங்கி கிடையாது. அப்படி சங்கியாக இருந்தால் லால் சலாம் போன்ற படத்தில் இருந்திருக்க மாட்டார். படத்தை பார்த்தால் அது புரியும். ஒரு சங்கியால் இந்த படத்தை பண்ண முடியாது. ஒரு மனிதநேய வாதியால் மட்டும் தான் இது போன்ற ஒரு கதையில் நடிக்க முடியும். அந்த தைரியம் அவருக்கு மட்டும் தான் இருக்கு. வேறு யாருக்கும் கிடையாது. அதை இந்த படம் புரியவைக்கும். ஒவ்வொரு ரசிகனும்... இந்துவாக இருக்கலாம், முஸ்லீமாக இருக்கலாம், கிறிஸ்துவனாக இருக்கலாம். ஒரு ரஜினி ரசிகனா கண்டிப்பா பெருமைப்படுகிற அளவிற்கு இந்த படம் இருக்கும்” என்றார்.