தே.மு.தி.க முன்னாள் தலைவர் மறைந்த விஜயகாந்தின் 72வது பிறந்தநாள் விழா அக்கட்சியினரால் நேற்று கோயம்பேட்டிலுள்ள அவரது நினைவிடத்தில் கொண்டாடப்பட்டது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் விஜயகாந்திற்கு முழு உருவச் சிலை மற்றும் மார்பளவு உருவச் சிலை திறக்கப்பட்டது. அந்த இரு சிலைக்கும் பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதைத் தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் வறுமை ஒலிப்பு தினம் என்ற தலைப்பில் நேற்று நடைபெற்ற விழாவில் பல திட்டங்களை செயல்படுத்தியதாகத் தெரிவித்தார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், “தே.மு.தி.க. தலைமை அலுவலகத்திற்கு கேப்டன் ஆலயம் என்று பெயர் மாற்றம் செய்துள்ளோம்” என்று கூறினார்.
விஜயகாந்த்தின் பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு பிறகு பிரேமலதா விஜயகாந்தை இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சந்தித்துள்ளார். சாலிகிராமத்திலுள்ள அவரது வீட்டில் சந்தித்த அவர், அங்கு இருக்கும் விஜயகாந்தின் உருவ படத்திற்கு மரியாதை செலுத்தினார். பின்பு பிரேமலதா விஜயகாந்திடம் நலம் விசாரித்தார். இது தொடர்பான புகைப்படத்தை பிரேமலதா விஜயகாந்த் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, “கேப்டனிடம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆசி பெற்றார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.