
நடிகர் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணைந்து தயாரித்த காக்கா முட்டை படத்தின் மூலம் பிரபலமானார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அதன் பிறகு நீண்ட நாட்களாக இவர்கள் கூட்டணியில் நடிக்காத அவர் தற்போது மீண்டும் இதே கூட்டணியில் உருவாகும் வட சென்னை படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இது குறித்து அவர் பேசியபோது...."தனுஷ் தயாரிப்பில் ‘காக்கா முட்டை’ படத்தில் நடித்த போது, எதிர்காலத்தில் அவருடன் எப்படியாவது சேர்ந்து நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். நான் நினைத்தது போல அது உடனே நடக்கவில்லை. தனுசுடன் நடிக்க வேண்டும் என்பது கனவாகவே இருந்து வந்தது. இப்போது, ‘வடசென்னை’ படம் மூலம் அது நனவாகி இருக்கிறது. நான் நடிக்கும் வேடத்தில் முதலில் அமலாபால் நடிப்பதாக இருந்தது. அதன் பிறகு சமந்தா நடிப்பதாக இருந்தார். இப்போது, நான் நடித்துக் கொண்டிருக்கிறேன். தனுசுடன் நடிக்க வேண்டும் என்று மனதுக்குள் பெரிய ஆசை வைத்திருந்ததால் தானோ என்னவோ, அந்த வாய்ப்பு வேறு யாரிடமும் செல்லவில்லை. என்னிடமே தேடி வந்து விட்டது. தனுஷ், வெற்றிமாறன் என்ற இரண்டு பெரிய ஜாம்பவான்களின் படங்களில் நடிப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது" என்றார்.