Skip to main content

உலக அரங்கில் மீண்டும் ஒரு தமிழ் சினிமா!

Published on 08/05/2019 | Edited on 08/05/2019

உலக சினிமாவை பார்த்து தமிழ் ரசிகர்கள் வியந்த காலங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் மாறி, தமிழ்த் திரைப்படங்கள் உலக மேடைகளில் முத்திரை பதிக்கும் காலத்தை பார்த்து வருகிறோம். நூறு திரைப்பட விழாக்களுக்கு மேல் சென்று முப்பதிற்கும் மேற்பட்ட விருதுகளை வென்ற டூலெட், உலகம் முழுக்க பயணித்து விருதுகளை வென்று கொண்டிருக்கும் பரியேறும் பெருமாள், உலக அரங்கங்களில் கைத்தட்டல்களைக் குவித்த காக்கா  முட்டை, விசாரணை படங்களின் வரிசையில் தற்போது இன்னொரு தமிழ் திரைப்படம், உலகத் திரைப்பட விழாக்களில் தன் முத்திரையை பதித்துக் கொண்டிருக்கிறது. 
 

gnanacherukku

 

 

தரணிராசேந்தரன் இயக்கத்தில் ஓவியர் வீரசந்தானம், வ.ஐ.ச.ஜெயபாலன், தமிழ்மாறன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள 'ஞானச்செருக்கு' திரைப்படம் இருபதிற்கும் மேற்பட்ட உலகத் திரைப்பட விழாக்களில் தேர்வாகி, பல விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்று வருகிறது. லண்டன், நியூயார்க், இங்கிலாந்து, ரஷ்யா, வெனிசுலா என பல நாடுகளில் திரையிடப்பட்டு நெகிழ்ச்சியான விமர்சனங்களையும் கைத்தட்டல்களையும் வென்றுள்ளது ஞானச்செருக்கு. 
 

குறிப்பாக வெனிசுலாவில் நடைபெற்ற FICOCC உலகத் திரைப்பட விழாவில் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த ஒளியமைப்பு, சிறந்த இசை, சிறந்த ப்ரொடக்சன் டிசைன் என ஐந்து விருதுகளையும், கொல்கத்தாவில் நடந்த Beyond Earth International Film Festival ல் Best Debut Feature Film என்ற விருதையும் பெற்றுள்ளது இத்திரைப்படம். இந்த ஒவ்வொரு திரைப்பட விழாவும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் கலந்துகொள்ளும் விழாக்கள் என்பதிலிருந்து இந்த விருதுகள் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை உணர்ந்துகொள்ள முடியும். 
 

முழுக்க முழுக்க இளைஞர்களால், சினிமாவில் முதன்முறை கால்பதிக்கும் கலைஞர்களால் உருவாக்கப்பட்டுள்ளது 'ஞானச்செருக்கு'. ஓவியர் வீரசந்தானம் இத்திரைப்படத்தில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் ஒளிப்பதிவு கோப்பிதுரைசாமி, படத்தொகுப்பு மகேந்திரன், இசை சக்கரவர்த்தி, பாடல்கள் நெய்தல், காட்சி நிறம் லோகேஷ்வரன், Graphics அரவிந்த் மற்றும் சிறப்பு சப்தம் கண்ணன். இவர்கள் அனைவரும் குறும்படங்கள் மூலம் இணைந்த இளம் கூட்டணி. குறும்படங்களைத் தொடர்ந்து இப்போது சினிமாவிலும் கால் வைத்துள்ள இவர்கள், முதலில் படத்திற்கான தயாரிப்பாளரை பலகாலமாக தேடியுள்ளனர். ஏமாற்றமும் தாமதமும் மட்டுமே பதிலாக கிடைக்க, க்ரவுட் ஃபண்டிங் எனப்படும் கூட்டுநிதியின் மூலம் படம் தயாரிக்க முடிவு செய்துள்ளனர். அதிலும் சில சிக்கல்கள் வர, படத்தில் வேலை செய்தவர்களின் மாத சம்பளங்களில் ஒரு பகுதி, நண்பர்கள், உறவினர்களின் பங்களிப்பு என ஒரு தொகை சேர, அதையே முதலீடாக வைத்து நான்கு வருட உழைப்பில் படத்தை எடுத்து முடித்துள்ளனர். 
 

குறும்படங்கள் மூலம்தான் நான் திரைமொழியை கற்றுக்கொண்டேன் எனக்கூறும் இயக்குனர் தரணிராசேந்திரனிடம் பேசினோம். 
 

"நம்ம மக்களுக்கு பொதுவா ஒரு மனநிலை இருக்கு. விருதுகள் வாங்குற படம்னா இப்படித்தான் இருக்கும்னு. அத மொத்தமா உடைச்சுரும் ஞானச்செருக்கு. ஏன்னா நவீன பாணிலதான் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கு. நிச்சயம் விறுவிறுப்பான ஒரு படமா இது இருக்கும். இது வரை தமிழ் சினிமா வகுத்த பாணியை ஞானச்செருக்கு உடைக்கும். அதேசமயம் அழுத்தமான கருத்தியல வெகுஜன மக்கள் கொண்டாடக்கூடிய நவீன திரைமொழில பேசுற படமாவும் இருக்கும். அதனாலதான் கடந்த மாதம் அமெரிக்கால நடந்த ஒரு திரைப்பட விழால ஞானச்செருக்கு படத்துக்கு தனித்துவமான கதை எனும் அங்கீகாரம் கொடுக்கப்பட்டுச்சு" என்றார். 
 

ஞானச்செருக்கு எதைக் குறிக்கிறது, எதைப்பற்றிய படமாக இது இருக்கும் என்ற கேள்விக்கு "கலைஞனும் கலையும் அதிகாரத்திற்கு மேல். அதிகாரத்திற்கு வீழாத, படைப்பின் விடுதலையை தேடும் படைப்பாளியின் உணர்வை விறுவிறுப்பாக, நவீன பாணியில் பேசும் ஞானச்செருக்கு" என்கிறார் தரணிராசேந்திரன். 
 

dharani

 

 

வெளிநாட்டு திரையிடல்களில் மொழித் தடையையும் தாண்டி குடும்பம் குடும்பமாக வந்து ரசித்துப் பார்த்து பாராட்டியுள்ளனர். ஒரு தமிழ்த்திரைப்படம் நாடு, கண்டம், மொழியைத் தாண்டி உலகின் பல்வேறு மூலைகளில் கொண்டாடப்படுவது நிச்சயம் தமிழ் சினிமாவின் மகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம் தான். தமிழ்நாட்டின் வாழ்வியல் தன்மையை, நம் வாழ்வை, கலையை, அரசியலை பேசும் ஒரு படத்தை உலகமெங்கும் மக்கள் பார்த்து அங்கீகரித்து வருகிறார்கள். நாம் எப்போது பார்ப்பது?
 

"திரைக்கு கொண்டுவரும் வேலைகள் நடந்துகொண்டிருக்கிறது. இன்னும் சில மாதங்களில் நிச்சயம் திரைக்கு வந்துவிடும். நிச்சயம் உங்கள் அனைவரின் ஆதரவும் வேண்டும்" என்கிறார் இயக்குனர் தரணிராசேந்திரன். 
 

நேர்மையான, தரமான படைப்புகளை தமிழ் ரசிகர்கள் எப்போது அங்கீகரிக்காமல், கொண்டாடாமல் விட்டதில்லை. நீங்க சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்க பாஸ்!

 

 

சார்ந்த செய்திகள்