பிரபாஸ் நடிப்பில் ஓம் ராவத் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘ஆதிபுருஷ்’. ராமாயணத்தின் ஒரு பகுதியை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் பிரபாஸ் ராமர் கதாபாத்திரத்திலும், க்ரீத்தி சனோன் சீதை கதாபாத்திரத்திலும், சையிப் அலிகான் ராவணன் கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர்.
3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இப்படத்தின் டீசர் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே கடும் விமர்சனத்தையும் கிண்டலையும் சந்தித்தது. இது தொடர்பாக மத்தியப்பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, அயோத்தி ராமர் கோயிலின் தலைமை குரு சத்யேந்திர தாஸ், உத்தரப்பிரதேச துணை முதல்வர்கள் கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் பிரஜேஷ் பதக், விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு உள்ளிட்ட பலர் இப்படத்தை வெளியிடத் தடை விதிக்கக் கோரி கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து ‘ஆதிபுருஷ்’ படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வருகிற ஜூன் 16 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்தது. அதன் பிறகு படத்தின் புது போஸ்டர் வெளியானது. இந்த போஸ்டர் தொடர்பாக இந்து மத கதாபாத்திரங்களை தவறாக சித்தரித்துள்ளதாகக் கூறி மும்பை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. டீசரை விட ட்ரைலரில் சிஜி காட்சிகள் கொஞ்சம் நன்றாக அமைந்துள்ளது.
இப்படத்தின் கதை அனைவருக்கும் தெரிந்தது என்றாலும் ட்ரைலரில் வரும், "அஹங்காரத்தின் நெஞ்சை பிளந்து வெற்றி கொடியை நிலை நாட்டி பறக்க விடுவோம்...", "அகிலத்தில் உள்ள அனைத்தும் உன்னிடம் இருந்தும் நீ அசுரன் தான்" என்கிற சில வசனங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.