பிரபாஸ் நடிப்பில் ஓம் ராவத் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் ‘ஆதிபுருஷ்’. ராமாயணத்தின் ஒரு பகுதியை மையமாக வைத்து உருவாகிவரும் இப்படத்தில் பிரபாஸ் ராமர் கதாபாத்திரத்திலும், கீர்த்தி சனோன் சீதை கதாபாத்திரத்திலும், சையிப் அலிகான் ராவணன் கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் அடுத்த ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே கடும் விமர்சனத்தையும் கிண்டலையும் சந்தித்து வருகிறது. மேலும் படத்திற்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஹிமாந்ஷு ஶ்ரீவஸ்தவா என்ற வழக்கறிஞர், இப்படத்தின் டீசரில் ராமர், சீதை, அனுமன் மற்றும் ராவணன் ஆகியோரை அநாகரீகமாக சித்தரித்து மத உணர்வுகளைப் புண்படுத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக ஜான்பூரின் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் அசுதோஷ் சிங்கிடம் படத்தின் தயாரிப்பாளர் ஓம் ரவுத் மற்றும் நடிகர்கள் பிரபாஸ் மற்றும் சையிப் அலி கான் உட்பட ஐந்து பேர் மீது புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் விசாரணையை வருகிற 27ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
முன்னதாக மத்தியப்பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, அயோத்தி ராமர் கோயிலின் தலைமை குரு சத்யேந்திர தாஸ், உத்தரப்பிரதேச துணை முதல்வர்கள் கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் பிரஜேஷ் பதக், விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு உள்ளிட்ட பலர் இப்படத்தை வெளியிட தடை விதிக்க கோரி கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.