டாப்ஸிக்கு உதவியாளராக கலாம்மா என்ற வயதான கேரக்டரில் நடிக்க வேண்டாம் என்று வினோதினிக்கு நெருக்கமான நண்பர்கள் பலர் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், படம் வெளிவந்தபிறகு வினோதினியின் பெயர் மட்டுமே பேசப்படும் வகையில் அமைந்துவிட்டது. சந்தோஷமாக இருக்கிறார் வினோதினி.
காஞ்சிவரத்தில் சின்னதாக அறிமுகமான கூத்துப்பட்டறை நடிகையான வினோதினிக்கு, எங்கேயும் எப்போதும் படத்தில் பலரும் பராட்டும்படியான கேரக்டர் கிடைத்தது.
சின்னச்சின்ன கேரக்டரில் நடிக்கிறீர்களே சங்கடமாக இல்லையா என்று கேட்டால் சிரிக்கிறார். நான் நடிக்க வேண்டும். எனது நாடகத் தயாரிப்புகளுக்கு பணம் வேண்டும் என்கிறார்.
ஸ்கிரிப்டில் நீங்கள் என்ன எதிர்பார்ப்பீர்கள்? என்று கேட்டால், முதலில் நான் ஸ்கிரிப்டை பார்க்க வேண்டுமே? என்கிறார். பல படங்களுக்கு வெறும் வசனம் மட்டுமே வரும். பிறகு எப்படி நான் எனது கேரக்டரை செதுக்க முடியும்? ஜிகர்தண்டா என்ற படத்தில் இரண்டே இரண்டு காட்சிகளில் வருவேன். ஆனால் அந்தக் காட்சிகள் படத்துக்கு முக்கியமானவையாக இருக்கும்.
குணச்சித்திர நடிகை நடிகர்கள் இல்லாமல் ஒரு படத்தை உருவாக்க முடியாது. அது இயக்குனர்களுக்கு தெரியும். தமிழ் சினிமா மட்டுமல்ல, இந்திய சினிமாவின் சிஸ்டமே கேரக்டர் நடிகர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் இதுதான். இதையெல்லாம் மாற்ற முடியுமா? இருந்தாலும் எனக்கு நடிப்பை பிடிக்கிறது. எனது நாடகத் தயாரிப்புக்கு பணம் தேவைப்படுகிறது என்கிறார்.
தியேட்டர் ஜீரோ என்ற பெயரில் நாடகக் கம்பெனி வைத்திருக்கிறார். 2012 ஆம் ஆண்டிலிருந்து பெட்டிக்கதைகள் என்ற தலைப்பிலும், ஆயிரத்தோரு இரவுகள் என்ற தலைப்பிலும் இவருடைய நாடகங்கள் புகழ்பெற்றவை. வெளிநாடுகளில் ஆங்கிலத்தில் இவர் நடத்திய கிராண்ட் ரிஹர்ஸல் என்ற தலைப்பில் இவர் நடத்திய நாடகம் ரசிகர்களை சிரிப்பில் ஆழ்த்தி ரசிக்கவைத்தது. நாடகம் முடிந்ததும் எழுந்து நின்று கைதட்டிய அனுபவம் இவருடைய நாடகத்துக்கு கிடைத்திருக்கிறது.
திறமைவாய்ந்த நடிகை வினோதினி மீது இப்போதுதான் லைம்லைட் திரும்பியிருக்கிறது.