ஈரான் நாட்டில் கடந்த மாதம் 13ஆம் தேதி மாஷா அமினி (22) என்ற பெண்ணை ஹிஜாப் அணியவில்லை என்று குற்றம் சாட்டி போலீசார் கைது செய்தனர். போலீசாரால் மிகக் கொடூரமாக தாக்கப்பட்டு அவர் கோமா நிலைக்குச் சென்றது பின்னர் தெரியவந்தது. இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த மாதம் 16ஆம் தேதி உயிரிழந்தார்.
இச்சம்பவம் பல நாடுகளில் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து ஈரானில் ஹிஜாபுக்கு எதிரான போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கின. அப்போராட்டத்தில் இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இப்போராட்டத்திற்கு பல்வேறு நாட்டில் உள்ள பெண்கள் தங்களது முடியை வெட்டி ஆதரவு அளித்தனர்.
அந்த வகையில் தற்போது பிரபல இந்தி நடிகை ஊர்வசி ரவுடேலா தனது முடியை வெட்டி ஆதரவு தெரிவித்துள்ளார். இதனை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து தான் முடி வெட்டும் புகைப்படத்தையும் இணைத்துள்ளார். மேலும் அந்த பதிவில், "ஈரானிய போலீசாரால் கைது செய்யப்பட்ட மாஷா அமினியின் மரணத்திற்கு எதிரான போராட்டங்களில் கொல்லப்பட்ட ஈரானிய பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு ஆதரவாக என் தலைமுடியை வெட்டுகிறேன்.
தலைமுடி பெண்களின் அழகு சின்னமாக பார்க்கப்படுகிறது. அதனை வெட்டுவதன் மூலம் சமூகத்தின் அழகு என்று சொல்லப்படும் அவற்றை பற்றி பெண்கள் கவலைப்படுவதில்லை. பெண்கள் அனைவரும் ஒன்றிணைந்து, ஒரு பெண்ணின் பிரச்சினையை ஒட்டுமொத்தப் பெண்களின் பிரச்சினையாகக் கருதினால், பெண்ணியம் ஒரு புதிய வீரியத்தைக் காணும்" என குறிப்பிட்டுள்ளார்.