தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் கே.பி.சவுத்ரி சமீபத்தில் போதைப்பொருள் வழக்கில் சிக்கினார். கோவாவில் உள்ள நைஜீரிய நபரிடம் இருந்து போதைப்பொருட்களை வாங்கி ஹைதராபாத்துக்கு கடத்தியுள்ளதாக சைபராபாத் போலீசார் அவரை கைது செய்தனர். இவர் ரஜினியின் கபாலி திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பை வெளியிட்டவர்.
இவர் கைதாகியிருப்பது டோலிவுட் திரையுலகில் பரபரப்பை கிளப்பியது. மேலும் போலீசார் விசாரணையில் பல தகவல்கள் வெளியாகின. இவர் பல்வேறு டோலிவுட் பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு நெருக்கமானவர்களுடன் வாட்ஸ்அப் மற்றும் தொலைப்பேசி உரையாடல்களில் ஈடுபட்டது தெரிய வந்தது. அதோடு நைஜீரியாவை சேர்ந்த சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் அவருக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் இந்த வழக்கில் நடிகை சுரேகா வாணி, ஜோதி மற்றும் அஷூ ரெட்டி ஆகியோரும் சம்பந்தப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாயின. மேலும் கைதான தயாரிப்பாளரும் சுரேகா வாணியும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் வைரலானது. இதையடுத்து நடிகை அஷூ ரெட்டி, இந்த விவகாரம் குறித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வன்மையாகக் கண்டிப்பதாகக் குறிப்பிட்டு இது பொய்யான தகவல் என விளக்கமளித்திருந்தார்.
இந்நிலையில் நடிகை சுரேகா வாணியும் இத்தகவல் குறித்து விளக்கமளித்துள்ளார். அவர் கூறுகையில், "சமீபத்தில் என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை. இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால் எங்கள் குடும்பம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எங்களது வேலையும் பாதிக்கப்பட்டுள்ளது. அதோடு என் குழந்தைகளின் எதிர்காலமும் பாதிக்கிறது. தயவு செய்து இந்த சர்ச்சைகளில் எங்கள் பெயர்களை இழுப்பதை தவிர்க்கவும்" என்றார்.