Skip to main content

”போத்திக்கிட்டு நடிக்க ஆசை; ஆனால், எவன் கூப்பிடுறான்” - சில்க் சுமிதாவின் ஆதங்கம் குறித்து ஷர்மிலி உருக்கம்

Published on 26/03/2022 | Edited on 26/03/2022

 

Actress Sharmili

 

இளம் வயதிலேயே க்ரூப் டான்ஸராக தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கிய ஷர்மிலி, இளவரசன், ஆவாரம்பூ உள்ளிட்ட பல படங்களில் கிளாமர் ரோல்கள் மற்றும் துணை கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானார். அவரை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சமீபத்தில் சந்தித்தோம். அந்த சந்திப்பில் பல்வேறு விஷயங்கள் குறித்து பகிர்ந்து கொண்ட ஷர்மிலி, நடிகை சில்க் சுமிதா குறித்து பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...  

 

கிளாமர் ரோல்களில் நடிக்கும்போது வீட்டில் என்ன நினைப்பார்கள் என்று ஒரு தயக்கம் இருந்தது. எனக்கு மட்டுமல்ல எந்தப் பெண்ணுக்குமே கிளாமர் ரோலில் நடிக்க பிடிக்காது. சில்க் சுமிதா எனக்கு ரொம்ப பழக்கம். அக்கா என்றுதான் அவரைக் கூப்பிடுவேன். ஒருமுறை அவருடன் பேசிக்கொண்டு இருக்கும்போது, இப்படி குட்டி குட்டி ட்ரெஸ்ஸா போட்டு நடிக்க உங்களுக்கு கூச்சமா இல்லையா அக்கா என்று கேட்டேன். அதற்கு அவர், எனக்கும் மூடிட்டு நடிக்கத்தான் ஆசை, எவன்டி அப்படி நடிக்க கூப்பிடுறான் என்றார். அதை எவ்வளவு ஃபீல் பண்ணி அவர் சொல்லியிருப்பார் என்பதை இப்போது என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. 

 

”சில்க் சுமிதா அக்காவுக்கு பட்டுப்புடவை கட்டி நடிக்க அவ்வளவு ஆசை இருந்தது. ஷூட்டிங் இல்லாதபோது அன்றைய நாள் முழுக்க, பட்டுப்புடவை கட்டி, தலை நிறைய பூ வைத்து, நகைகள் அணிந்து வீட்டிலேயே இருப்பாராம். அதை அவர் சொன்னபோது ஆச்சர்யமாக இருந்தது. சில படங்களில் அவர் சேலை கட்டி நடித்திருந்தாலும்கூட அதுவும் கவர்ச்சியாகத்தான் இருக்கும்.

 

அவர் மாதிரி அழகை பராமரிக்க கூடியவர்கள் ஹாலிவுட்டில்கூட இருக்கமாட்டார்கள். ஒரு தெலுங்கு பட ஷூட்டிங்கில் இருந்தபோது, அக்கா சாப்டீங்களா என்றேன். நாலு பாதாம் பருப்பு சாப்பிட்டேன் என்றார். சாப்பாடு சாப்பிட்டுவிட்டு பாதம் பருப்பு சாப்டீங்களா என நான் கேட்க, இல்லை பாதாம் பருப்பு மட்டும்தான் சப்பிட்டேன் என்றார். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. நல்ல சாப்பாடு சாப்பிட்டே ரொம்ப நாளாச்சு, அதிகம் சாப்பிட்டா வயிறு வச்சிருது என்றார். அந்தக் காலத்திலேயே கோல்டு லிப்ஸ்டிக்ஸ் போட்டவர் அவர் மட்டும்தான். பேஷன் சம்பந்தமான நிறைய புக்ஸ் பார்த்துக்கொண்டே இருப்பார்.  என்னையும் உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ளும்படி அடிக்கடி அறிவுறுத்திக் கொண்டே இருந்தார்”. இவ்வாறு ஷர்மிலி தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்