பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளரும் மலையாள நடிகையுமான சுபி சுரேஷ் காலமானார். அவருக்கு வயது 41. கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கல்லீரல் தொடர்பான பிரச்சனை தொடர்பாக சில காலம் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இவரது மறைவு தற்போது மலையாள ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலர் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
2006 ஆம் ஆண்டு ஜெயராம் நடிப்பில் வெளியான 'கனக சிம்ஹாசனம்' படத்தின் மூலம் திரையுலகத்திற்கு அறிமுகமானார். பின்பு மோகன்லாலின் 'டிராமா', சுரேஷ் கோபியின் 'டிடெக்டிவ்' உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மிமிக்ரி ஆர்டிஸ்ட்டாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய அவர், மேடை மற்றும் தொலைக்காட்சி நகைச்சுவை நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றினார். அதன் மூலம் தனக்கென ரசிகர்களை உருவாக்கி அவர்கள் மனதில் முக்கிய இடத்தை பிடித்தார்.
சுபி சுரேஷின் மறைவுக்கு நடிகர் சுரேஷ் கோபி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "என்னால் இன்னும் இழப்பை சமாளிக்க முடியவில்லை. அவரது மறைவை முடிந்தவரை தவிர்க்க முயன்றோம்" என்றார். மேலும் நடிகரும் இயக்குநருமான ரமேஷ் பிஷாரடி, மூத்த மலையாள நடிகர் மமுக்கோயா உள்ளிட்ட பலரும் தங்களது வருத்தத்தை தெரிவித்துள்ளனர்.